பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

370

தமிழர் வரலாறு


குதிரையும், களிறும், முதலைவகையில் ஓர் இனமாம் கராமும் திரண்டிருக்கும், மழைபெய்யும் மலையிடத்தை ஒத்திருந்தது, தொழுவினுள், ஏறுகளைத் தழுவுதற்கு விரும்பிக் குதித்த ஆயர்குல இளைஞர்களை ஏறுகள் தேடித்தேடிச் சென்று குத்தின. அதனால், தம் பகையான ஏறுகளைத் துரத்தும் இயல்புடையவான அவ்வேறுகளின் வளைந்த கோடுகளில், சுற்றிலும் எரிகாலும் கணிச்சிப் படையுடையோனாகிய சிவன் சூடிய பிறைத்திங்கள் மீது செம்மாலை கிடப்பது போல், குருதிசொட்டும் குடர்கள் சுற்றிக்கிடந்தன, அவ்வாறு குடர் சுற்றிக் கிடக்கும் கொம்புகளைக் கொண்ட ஏற்றின்முன் நின்று, அக்குடரை இரண்டு கைகளாலும் வாங்கித் தன் வயிற்ற்கத்தே அடைப்பவன். சிவந்த நூல் சுற்றிய கழியை ஒருவன் இரண்டு கைகளிலும் கோத்துப் பிடித்திருக்க: அந்நூலை மூன்று நூலாக்க ஈர்ப்பவன் போன்றுள்ளான், தோழி, அவன் ஆற்றலைக் காண் எனத் தலைவிக்குக் காட்டினாள்.

போர் வெறிகொண்ட ஏற்றின் கழுத்தில் பாய்ந்து, அதற்குச் சூட்டிய மாலைபோல் தழுவ நிற்கும் இவ்விளையோன் எருமை நிரை கொண்ட ஆயர் மகன் அல்லவோ? இவன், அவ்வேற்றின் வலியை அழித்தல்லது அதைவிடான். இளையோய்! இவன் ஆண்மையைக் காண்பாயாக என்று மற்றோர் ஆயர் இளைஞனைக் காட்டினாள் தோழி. மறுக்கொண்ட ஏற்றை ஆட்டி அலைக்கழித்துவிட்டு, அதன் மீது நீர்ப்பரப்பில் தெப்பத்தின் மீது கிடந்து, அதனை எளிதே தள்ளிச் செல்பவன் போல், அமைதியாக அமர்ந்து செல்பவன், ஆனிரைச் செல்வனாம் ஆயர் மகன் அல்லவோ? ஏற்றினை அவ்வாறு அடக்கிச் செலுத்துவதை விடாது செய்யும் அவன் ஆற்றல் சிறப்பினைக் காண்; எனப் பிறிதொரு ஆயர் குல இளஞ்சனைக் காட்டினாள் தோழி. எருமைக்கடா ஊர்ந்து வரும் கூற்றுவனின் நெஞ்சைக் காலாலே பிளந்து, அவன் அரிய உயிரை வாங்கிய, அன்றைய இறைவன், இவன் போலத்தான் இருப்பான்கொலோ, எனக் காண்பர் ஐயுற்று, காற்றென விரைந்து வந்த கரிய ஏற்றை, அதன் வலி அடங்கத்