பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

379

“அறிவு என்னும் அங்குசத்தால், ஐம்பொறிகளாகிய ஐந்து யானைகளையும், ஐம்புலன்கள் மீது ஒட விடாமல் காக்க வல்லவன். எல்லா நிலங்களிலும் தலையாயது எனப்படும் வீட்டுலகில் தான் சென்று முளைக்கும் விதை ஆவன்.”

“உரன்என்னும் தோட்டியான், ஒர்ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்குஒர் வித்து”

- குறள் : 24
. “ஆகூழ் இன்மையால் பொருள் இழந்து வறுமையுற்றவர் ஒருவர், பின் ஒரு காலத்தில் ஆகூழ் வாய்க்க செல்வத்தால் செழிக்கவும் செய்வர்; ஆனால், ஒரு முறை அருளை இழந்தவர், அதை இழந்தவரே; மீண்டும் அருள் உடையவராதல் அறவே இயலாது.”

“பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் : அருள்அற்றார்,
அற்றார்மற் று,ஆதல் அரிது”

- குறள் : 248

“புடத்தில் இட்ட பொன், அப்புடத் தீ சுடச் சுடத் தன் கண் மாசு நீங்கி ஒளி விடுவது போல, தம் கடமையைத் தவறாது ஆற்றுவதாம் தவம் செய்வார்க்கு, அக்கடமையாற்றுவதால் வரும் துன்பம் அவரை வருத்த வருத்த, அவர் புகழ் ஒளி விட்டு விளங்கும்.”

“சுடச்சுடரும் பொன்போல், ஒளிவிடும், துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு”

- குறள் : 287

“உடம்பிற்கும் உயிர்க்கும் இடையில் உள்ள உறவு: முட்டையானது தனித்து விடப்பட்டு கிடக்க, அதன் உள் இருந்த பறவை, அதை விடுத்துப் பறந்து போகும் இயல்புடையதாகும்.”

“குடம்பை தனித்துஒழியப், புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு”

- குறள் : 388