பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

424

தமிழர் வரலாறு

"Tales of part lifes popularaized by the Buddhas abound In this Canto"- Page : 599.

வாணிகம் செய்யும் கருத்தோடு, சிலம்பு விற்கக் கோவலன் மதுரை சென்றுகொலையுண்டு போவது, அதனால் சினங் கொண்டு, கண்ணகி, மன்னனையும் சபித்து, மதுரையையும் எரியூட்டி அழிப்பது, இறுதியில் இருவரும் வானாடு அடைவது, ஆகிய இவை மட்டுமே தான் சிலப்பதிகாரம் என்றால், அதற்கு, முதல் இரு காண்டங்களில் உள்ள 23 காதைகளும் தேவையில்லை. புகார்க்காண்ட்த்து ஒன்பதாவது காதையாம் கனாத் திறம் உரைத்த காதையில், "சிலம்பு முதலாச் சென்ற கனவனொடு உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்" என்ற 74 வது வரி தொடங்கி, மதுரைக் காண்டத்துக் கட்டுரைக் காதையில், "கோவலன் தன்னொடு வானவூர்தி ஏறினள் மாதோ கானமர் புரி சுழல் கண்ணகி தான் என்" என முடியும் ஈற்றுவரிவரை கொண்டால் அதுவே போதும்.

வஞ்சிக் காண்டத்தில், செங்குட்டுவன் புகழ், அவன் வடநாட்டுப் படையெடுப்பு மட்டுமே கூறப்பட்டுள்ளன : அதற்கும் சிலம்பிற்கும் தொடர்பில்லை என்பதாயின், புகார்க் காண்டத்திலும் அதில் உள்ள பத்துக் காதைகளில், கனாத்திறம் உரைத்த காதையின் ஈற்றுச் சில வரிகள், நாடு காண் காதை ஆகிய பகுதிகள் நீங்க, எஞ்சி நிற்கும் முற்பகுதிக் காதைகள், சிலம்பு பற்றி ஏதும் கூறவில்லை. கோவலனின் பரத்தமை ஒழுக்கம் பற்றியே கூறுகின்றன: ஆகவே, அவையும் சிலப்பதிகாரத்தின் அங்கமாதல் இயலாது எனக்கொள்ள, வேண்டிநேரும்: அது பொருந்தாது : புகார்க்காண்டத்து, மேலே கூறிய எஞ்சிய பகுதிகள், கோவலன் பரத்தமை ஒழுக்கம் கூறுவனவே எனினும், அதன் மூலம், கணவன் , பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்டவன் எனினும், அவன் மீது கொண்ட அன்பு மாறாக் கண்ணகியின் கற்பு நலம், சிலம்பு விற்க நேர்ந்தமைக்குக் காரணமான கோவலன் செயல் என்ற, சிலம்போடு தொடர்புடையனவே கூறுவதால், சிலப்பதிகாரத்தின் இன்றியமையா அங்கம் ஆகின்றன: