பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/461

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள்

451


ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு' (885) என்ற குறளில் கொண்டார்.

‘'பயிரிடுகின்றவன் பயிருடன் உண்டாகிய புல் முதலியவற்றைப் பிடுங்கிவிட்டுப் பயிர்களைக் காப்பாற்றுவதுபோல, அரசன், தன் தேசத்தில் உண்டான துஷ்டர்களைத் துரத்தி விட்டு நல்லோர்களைக் காப்பாற்றல் வேண்டும். என்ற மனுதர்மசாஸ்திரம் (அதிகாரம் : 7), ஏற்புடையதாகவே, தம்முடைய, கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல், பைங்கூழ் களைகட்டதனோடு நேர், (550) என்ற குறட்பாவில் கொண்டார்,

வடமொழி சாஸ்திரங்களில் ஏற்புடையனவற்றை ஏற்கும் திருவள்ளுவர். அவற்றுள் ஏலாதனவற்றைத் தம் குறட்பாக்களில் வன்மையாக மறுத்தும் உள்ளார்.

யக்கியத்திற்காகவே பசுக்கள் பிரமனால் சிருஷ்டிக்கப் படுகின்றன. ஆகையால், யக்யத்தில் செய்யும் பசுஹிம்சை ஹிம்சை அன்று’' எனக்கூறும் மனுதாம சாஸ்திரக் கொள்கையை (அத்தியாயம் : 5) ‘அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று’' (259) என்ற குறளில் கண்டித்துள்ளார். *

‘பசியால் துன்புறுகின்ற அன்னை, பிதா, குரு, வேலைக்காரன் என்னும் இவர்களைக் காப்பாற்றுகிறவனாயும், தேவர், அதிதி என்னும் இவர்களைப் பூசிக்கின்றவனாயுமிருப்பவன், யாரிடத்தும் தானம் வாங்கலாம்’ என்ற மனுவின் (அத்தியாயம் : 4) கொள்கையை ‘ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை’’ என்ற குறட்பாவில் (656) வன்மையாகக் கண்டித்துள்ளார். உரையாசிரியர் பரிமேலழகர்’, இறந்த மூப்பினராய இரு முது குரவரும், கற்புடைய மனைவியும், குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக என்னும் அறநூற் பொதுவிதி எய்தாமை பற்றி