பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

485


கொண்டிருந்தனர். மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றான, தருமி என்ற ஏழைப் பார்ப்பனனுக்குப் பொற்கிழி பெற்றுத் தருவான் வேண்டித் தமிழ்ச்சங்கம் சென்ற திருவிளையாடல் திருநாவுக்கரசு நாயனாரால் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கிறோம். '‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி, நற்கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்’' (திருப்புத்துளர் திருப்பதிகம் : 2:1-2) ஆகவே, தமிழ்ச் சங்கம் நிறுவியது உள்ளிட்ட எண்ணற்ற திருவிளையாடல்கள் குறித்த பழங்கதைகள் எழுமளவு, சிவ வழிபாடு ஆறாம் நூற்றாண்டில் மக்களிடையே பயில இடம் பெற்றிருந்தது. பெரிய புராணக் கூற்றுப்படி, கர்னாடக அரசனை அரியணையிலிருந்து அப்புறப்படுத்தி விட்டு மதுரை அரசனாகிச் சிவவழிபாட்டை மீண்டும் உயிர்ப் பித்தவரும், அக்கர்னாடக அ ர ச னா ல் கொல்லப் பட்டவருமான மூர்த்திநாயனார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராதல் வேண்டும்.

ஆறாம் நூற்றாண்டில் சோழநாடு

சமணம், சைவம், வைஷ்ணவம் ஆகிய சமயங்களின் வழிபாட்டு நெறிகள், சோழ நாட்டில், இந்த நூற்றாண்டு காலத்தில் பெருமளவில் இடம் பெற்றிருந்தன. சிலப்பதிகாரம் எழுதப்படுவதற்கு முன்னரே, சீரங்கம் புகழ்பெற்றுத் திகழ்ந்தது என்பது ஏற்கெனவே கூறப்பட்டது. சீரங்கம் கோயிலில் பாதுகாக்கப்பட்டுவரும் கோயில் ஒழுகு என்ற கற்பனை வாய்ந்த வரலாற்று நூல், தொடக்கத்தில் கடவுளால் கட்டப்பெற்று, காவிரி ஆற்று மணலால் புதையுண்டுபோன கோயிலை அகழ்ந்து கண்ட சோழன் ஒருவன் பற்றிப் பேசுகிறது. சீரங்கம் பெருமானுக்கே தன்னை ஒப்படைத்துக் கொண்டு, அவனை ஆரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டு, பின்னர் அவனோடு இரண்டறக் கலந்து மறைந்துபோன ஒருத்தியை மகளாகப் பெற்ற உறையூர்ச் சோழன் ஒருவனின் கதை குறித்தும் அது விளக்கம்