பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/497

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழமை புதுமைகளின் இணைப்பு

487


இறக்கும்போது யானை வலிபொறுக்கமாட்டாமல், தன் துதிக்கையை ஓங்கி ஓங்கித் தரையில் மோதவே, அம் மோதலால் சிலந்தியும் இறந்து, செங்கணனாக மறுபிறவி எடுத்தது.

செங்கணான், ஒரு புராணக் கதையின் தலைவனாயினும், அவன் ஒரு வரலாற்று அரசனுமாவன்: கி. பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைஷ்ணவ ஆழ்வாராகிய திருமங்கை ஆழ்வார், எண்தோள் ஈசனுக்கு, எழுபது அழகிய திருக்கோயில்களைக் கட்டினான் செங்கணான் என்று கூறியதோடு, தம்முடைய திருநறையூர்ப் பாசுரம் பத்திலும், அவ்வூரில் உள்ள கோயிலில் எழுந்தருளி இருக்கும், திருமாலை வழிபட்டான் என்றும் கூறியுள்ளார்.

இருக்கிலங்கு திருமொழிவாய் என்தோள் ஈசற்கு
எழில் மாடம் எழுபதுசெய்து உலகம் ஆண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.’'

திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், செங்கணான், சிவன் கோயில்கள் கட்டிய நிகழ்ச்சியைத் தம்முடைய தேவாரங்களில், பல இடங்களில் சுட்டிக் கூறிப் பாராட்டியுள்ளனர். (திருஞான சம்பந்தர், திருவைகல் மாடக்கோயில் தேவாரம் 1, 4, 5; திருவம்பர் தேவாரம் ; சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருநன்னிலம் தேவாரம் :10; திருநறையூர் தேவாரம் : 1) திருத்தொண்டர் புராணம், கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தொகுக்கப்பெற்றபோது, அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகச் செங்கணானும் சேர்க்கப்பட்டான். ஆனால், முன்னரே குறிப்பிட்டவாறு, அவன் ஒரு வைஷ்ணவ வழிபாட்டாளனும் ஆவன். சைவர்களும், வைஷ்ணவர்களும், பவுத்தர்களுக்கும், சமணர்களுக்கும் எதிராக, வேதநெறி தழைத்தோங்கச் செய்யும் பொதுப் பணியில் ஒன்று பட்ட காலமாம் ஆறாம் நூற்றாண்டைச் சேர்த்தவன் செங்கணான்,