பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

இந்தியநாட்டு வரலாறு பெரும்பாலும் வட இந்திய வரலாறாகவே அனைத்து வரலாற்றாசிரியர்களாலும் எழுதப்பட்டுள்ளது. சமய தத்துவ, பண்பாட்டு வரலாறுகள் என்று எடுத்துக்கொண்டால் கூட, பெரும்பாலும் தென்னிந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. ஐயாயிரம் ஆண்டுகட்கு மேலாகத், தொடர்ச்சியான வரலாறுடைய தமிழ் மக்களின் உண்மை வரலாறு உலகுக்கு எடுத்துக் கூறப் பெறவேயில்லை.

தமிழக வரலாற்று நூல்கள் பல வெளிவந்திருப்பினும், பி.டி.சீனிவாச அய்யங்காரின் ‘தமிழர் வரலாறு’ ஆங்கில நூலுக்குப், புகழ் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. நீண்ட காலமாக அச்சில் இல்லாதிருந்த காரணத்தால் அதனைத் தேடிப்பிடித்துப் படித்து வந்தனர். இந்நிலையில் அண்மையில் அதன் மறுபதிப்பு வெளிவந்தபோது தமிழ்மக்கள் மட்டுமல்லாது தமிழர் வரலாற்றில் நாட்டமுடைய மேலைநாட்டறிஞர்களும் விரும்பி வாங்கிப் படிக்கலாயினர்.

இதனைப் பார்த்தபோது ஏன் இதன் தமிழாக்கத்தை வெளியிடக்கூடாது என்ற தூண்டல் எழுந்தது. இதுபற்றித் தமிழகச் சட்டப்பேரவை மேனாள் தலைவரும், கழக நூலாசிரியருமான புலவர் கா.கோவிந்தன் எம்:ஏ: அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது தாம் முன்னரே முழுதும் மொழியாக்கம் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்து, கழகம் அதனை வெளியிடலாமென்றும் கூறினார்கள்.

அவருடைய தமிழாக்கத்தைப் பார்த்தபோது ஓருண்மை புலப்பட்டது. சீனிவாச அய்யன்கார் நூலைப்படைக்கும் போது, அப்போது தமக்குக் கிடைத்த சான்றுகளைக்கொண்டு