பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

524

தமிழர் வரலாறு


அர்மீனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட, கிருஷ்ணன் பலதேவன் ஆகிய கடவுளர் இருவரும், தமிழ் இலக்கியங்களில், மாயோன் என்றும் வாலியோன் என்றும் குறிப்பிடப் பட்டிருக்கும் கடவுளர்கள் தாம் என்பதையும், மாயோன் , வெள்ளையோன் என்ற பெயர்களையே அல்லாமல் கிருஷ்ணன், பலதேவன் என்ற வடமொழிப் பெயர்களையும், தமிழர்கள் அக்காலத்திலேயே அறிந்திருந்தனர் என்பதையும், அக்கடவுளர்கள்தாம், தமிழகத்து வணிகப் பெருமக்களால், தாம் சென்று குடியேறிய வணிக நிலையப் பெரு நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்பதையும் திருவாளர் அய்யங்கார் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது உறுதி ஆகிறது : அது உறுதி ஆகவே, அவ்வணிகப் பெருமக்களின் தாய்த் திருநாடாம் தமிழகத்தில், அக்கடவுளர்கள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே நிலைகொண்டிருக்க வேண்டும் என்பது கூறாமலே உறுதிப்படுகிறது. ஆகவே, அக்கடவுளர்களும், அவர்களே போலும், ஆகம நெறி, புராணநெறிக் கடவுளர்களும் இடம் கொண்டிருப்பது கொண்டு, அவர்கள் இடம்கொண்ட பாக்களைக் கி. மு. 200க்கும் முற்பட்ட காலத்தனவாகக் கொள்வதே, துருக்க நெறி முடிவாகுமே அல்லது, அவ்விலக்கியங்களைக் கி. பி. 400க்கு, அதாவது 600 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின் கொண்டு நிறுத்துவது முறையாகாது.


திரு. அய்யங்கார் முடிவுகள், முன்னுக்குப் பின் முரண் படுகின்றன என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு இதோ :


‘இராமன், விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவன் என்பது கருத்து, இராமகாதையில் கி. மு. 1000 ல் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் [The conception that Rama was one of the Avatars of Vishnu could have got into the story of Rama, only after X century B. C. page : 45.]


‘'விஷ்ணு, சிவன் குறித்த புராணக் கதைகள், பாரதப் போரை அடுத்த காலகட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற ஆகம நெறிகளில் மேற்கொள்ளப்பட்டுவிட்டன