பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/544

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

554

தமிழர் வரலாறு

இருகுடை பின்பட, ஓங்கிய ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்து சேண்விளங்க

— புறம் : 31.

என்ற வரிகளை எடுத்தாண்டு விட்டு, அடிக்குறிப்பில், “இத்தொடர். ஆரியக் கருத்துக்கள், தமிழ்நாட்டில் நன்கு இடம் பெறத் தொடங்கிவிட்டன என்பதை உணர்த்துகிறது. வாழ்க்கையின் குறிக்கோள் பற்றிய ஆரியக் கருத்துக்களை உள்ளடக்கிய உருவப் பொருட்களை, அருவப் பொருட்களோடு ஒப்புக் காட்டும் இவை போலும் உவமைகள் , கரிகாலனுக்கு முற்பட்ட காலத்து தமிழிலக்கியங்களில் காண்பது இயலாது. [This phrase shows that Aryan ideas Were now rapidly gaining ground in Tamil india. Such a simile, involving the Aryan concept of the objects of life and comparing concrete objects with abstract ideas, cannot be discovered in Tamil Literature, before the time of Karikal. Page : 418.] எனக் கருத்தறிவிப்பதன் மூலம், அத்தகு கருத்துக்கள் அடங்கிய சங்க இலக்கியங்களைக் கி. பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிற்குக் கொண்டு வந்து நிறுத்துகிறார் திருவாளர் அய்யங்கார் அவர்கள்.

பண்டைத் தமிழர், ஐவகை நிலத்தும் மேற்கொண்ட வாழ்க்கை நெறியினைத் தொல்காப்பியர், “இன்பமும், பொருளும் அறமும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை” (தொல் : பொருள் : 83) எனக் கூறியுள்ளார். அது மட்டுமன்று; ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய பாக்கள் நான்கும், எப்பொருள் பற்றியெல்லாம் பாட உரிமையுடைய என்ற வினாவிற்கு விடையளிக்கும் நிலையில் “அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய மும்முதற் பொருட்கும் உரி என்ப” (தொல். பொருள் : 411) எனக் கூறியுள்ளார்.

ஆகவே, அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய கொள்கை தமிழர் உள்ளங்களைத், தொல்காப்பியர் காலத்துக்குச் சில பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆட்கொண்டுவிட்டன;