பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழர் வாழ்வு


கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள்சேரா என்று. பரிமேலழகர் கடவுள் வாழ்த்தில் இறைவனைப் பற்றிக் கூறிய தொடர், இந்த அரசனாம் ‘இறைமாட்சி’யாளனுக்கும் பொருந்துவதாகும். அந்த இறைமைக் குணங்களையே வள்ளுவர் திருக்குறளிலும் சங்கப் புலவர்கள் எட்டுத் தொகையிலும் பத்துப்பாட்டிலும் விளக்கிக் காட்டுகின்றனர்.

திருவள்ளுவர் அரசியல் முதல் குறளிலேயே அரசனுக்கு இன்றியமையாது வேண்டப்படுபவை யாவை என்பதைத் திட்டமாக விளக்கியுள்ளார்.

படைகுடி கூழமைச்சு நட்பு:அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

(குறள் 381)

என்று காட்டுகின்றார். நாடு காக்கும் நல்ல படையே முதலிடம் பெறுகின்றது. இப் படையை உருவாக்க உதவும் குடிமக்களும், அவர்கள் குறையின்றி உண்டுவாழக் கூழும் அவற்றை ஆக்கித் தரும் நல்லமைச்சும், அவற்றுடன் அரசனுக்கு உறுதுணையாம் நட்பும், இயற்கையாக அமையும் நல்லரணும் வள்ளுவரால் காட்டப்பெறுகின்றன. இவை ஒவ்வொன்றும் சங்க இலக்கியங்களில் பலவாறு பேசப்பெறுகின்றன. சங்க இலக்கியங்கள் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடிகளென அமைய, குறள் அவ்வாழ்வைச் சுட்டும் இலக்கண நூலாக அமைகின்றது. எனவே, குறள் சுட்டும் மரபும் தன்மையும் பிறவும் ‘இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பும்’ மரபை ஒட்டிச் சங்ககால வாழ்வினையும் அதன் அடிப்படையில் அமைந்த, இலக்கியங்களையும் சார்ந்து நிற்கின்றன. எனவேதான் மேலே கண்ட ‘ஆறு’ பற்றி – ஓரடியில் வள்ளுவர் காட்டிய இன்றியமையாச் சிறப்புக்கள் பற்றி – சங்க இலக்கியங்கள் பல்வேறு இடங்களில் நன்கு பாராட்டிக் காட்டுகின்றன. சிறப்பாகப் புறப்பாடல் தொகுதிகளாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/116&oldid=1358604" இலிருந்து மீள்விக்கப்பட்டது