பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. பல்லவர்கால வரலாறு



உலக நாடுகள் அனைத்தும் தத்தமக்கெனக் கடந்த கால வரலாறுகளைப் பெற்றிருக்கின்றன. சில நாட்டு வரலாறுகள் பழமை வாய்ந்தனவாகவும், சில காலம் கணிக்க முடியாதனவாகவும், சில இடையிடையே இருளடைந்த நிலையிலும் உள்ளமையை வரலாற்று ஆய்வாளர் நன்கு அறிவர். ஒருசில மறைந்த வரலாறுகளைப் பற்றியும் அவற்றின் அடிப்படையில் காணும் பண்பாடு, நாகரிகம், சமயம், பிறவாழ்வு நிலைகளைப் பற்றியும். தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்ந்து அறிந்து—ஆழ்ந்து உணர்ந்து உலகுக்கு உணர்த்துகின்றனர். இந்திய நாட்டுச் சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டுப் பழம் பெரு நாகரிகமும் அந்த அடிப்படையில் ஆய்வுக்கு நிலைக்களன்களாக அமைந்து, பலப்பல புதுப்புது உண்மைகளை நமக்கு உணர்த்தும் வரலாற்றுச் செல்வங்களாக அமைகின்றன. அந்த அடிப்படையில், வாழ்ந்து மறைந்த சின்னங்கள்—வடித்தெடுத்த சிற்பங்கள்—செதுக்கி வைத்த எழுத்துக்கள்—புதைத்து வைத்த தாழிகள் போன்றவை பலப்பல உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன.

இந்த வகையில் தமிழகத் தொல்பொருள் ஆய்வு நிலையம் பல ஆண்டுகளாக நல்ல பணியாற்றி வருகின்றது. தற்போது அதன் இயக்குநராகிய திரு. நாகசாமி அவர்களும் நல்ல ஆராய்ச்சி செய்து தாமே சில நூல்களையும் வெளியிட்டுள்ளார். அத்துறையினர் பல்வேறு வகையில் முயன்று தமிழர்தம் பெருநாகரிகத்தை உலகுக்கு காட்ட முயல்கின்றனர். அம்முயற்சி பல வகையில் உருவாகிச் சிறக்கின்றது. அவற்றுள் ஒன்றே இன்றைய வகுப்பு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/133&oldid=1358536" இலிருந்து மீள்விக்கப்பட்டது