பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர்கால வரலாறு

145


நூற்றாண்டின் இடை வரையில் காஞ்சியின் எல்லையில் தொடர்ந்து நின்றது என்பதனை யாரும் மறுக்கவில்லை. எனினும் இடைக்காலத்தில் சோழர் தலை தூக்கினார்களோ என எண்ண வேண்டியுள்ளது. அதனைப் பின்னர்க் காண்போம்.

இந்த ஆறு நூற்றாண்டுகளில் காஞ்சியில் ஆண்ட மன்னர் வரலாறே பல்லவர் வரலாறாக அமைகின்றது. அக்கால மன்னர் வரிசையினையும் ஆண்ட வகையினையும் பிறவற்றையும் பல வரலாற்றறிஞர்கள் விளக்கமாகக் காட்டிச் சென்றுள்ளனர். எனவே அவற்றை மீண்டும் நான் இங்கே காட்ட விரும்பவில்லை. எனினும் ஒருசில அடிப்படைகளை மட்டும் தொட்டுக் காட்டிவிட்டு மேலே செல்ல நினைக்கின்றேன்.

முதற் பல்லவராகிய பிராகிருதப் பல்லவர் ஆட்சி காஞ்சியில் மட்டுமன்றி அதற்கு வடக்கேயும் கிருஷ்ணை ஆற்றங்கரை வரையிலும் பரவி இருந்ததென்பது தெளிவு; அவர்தம் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் ஆந்திர நாட்டில் உள்ளமை அறிகிறோம். அவருள் ஒருவனாகிய விஷ்ணுகோபனையே சமுத்திர குப்தனின் அலகாபாத்துக் கல்வெட்டு 'கிருஷ்ணை ஆற்றங்கரையில் ஆட்சி செய்த பல்லவன்' எனக் குறிக்கிறது. அவ்விஷ்ணுகோபன் நான்காம் நூற்றாண்டின் இடைக் காலத்தவன். அவனுக்கு முன் பப்பதேவன், சிவஸ்கந்த வர்மன், அங்குரன், வீரவர்மன் என்ற நான்கு முதற் பல்லவர் ஆண்டதாகக் குறிக்கின்றனர். பப்பதேவனே முதன்முதல் காஞ்சியைத் தலைநகராக்கிக் கொண்ட பல்லவனாவன். இளந்திரையனுக்குக் குறைந்தது 70 அல்லது 80 அல்லது 100 ஆண்டுகள் கழிந்து இந்நிகழ்ச்சி நிகழ்ந்திருக்கலாம் அந்த இடைக்காலமே முன் கண்ட களப்பிரர் ஆட்சிக் காலமாக இருந்திருக்கலாம். இவர்கள் காலத்திலேயே கோயில்களுக்குத் தானம் வழங்கிய மரபும் அவற்றைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/147&oldid=1359039" இலிருந்து மீள்விக்கப்பட்டது