பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழர் வாழ்வு


சிம்மவிஷ்ணுவாகிய அவன் தந்தையின் பெயரை ஒட்டி அவனை வைணவ சமயத்தைச் சார்ந்தவனாகக் கூறினும் அது ஆராய்தற்குரியது. அப்படியே அவன் மகனான நரசிம்மன் காலத்தில் அக்காலப் பாண்டியநாட்டில் உள்ளுக்குள் புகைந்திருந்த பெருங்கிளர்ச்சி கூன்பாண்டியனுடைய சமய மாற்றத்தால் வெளியே கிளர்ந்தெழுந்து நாட்டில் பெருமாற்றத்தை உண்டாக்கிற்று. ஒரு நாட்டு மக்களின் அடிப்படைப் பண்பாட்டிற்கு மாறுபட்ட எந்தக் கொள்கையும். அவ்வப்போது ஆணை அளித்தல், பிற வகை உதவிகள் முதலியவற்றால் ஓங்குவது போலக் காணப்படினும், கால வெள்ளத்தில் எதிர் நிற்காது மறையும் என்பதைத்தான் இந்த ஏழாம் நூற்றாண்டின் வரலாறு காட்டுகின்றது. இந்த உண்மையை உணர்ந்தமையால் தான் மேலை நாட்டிலிருந்து தமிழகத்தில் தம்சமயம் பரப்ப வந்த பாதிரியார்கள் தம்மை நடை, உடை, பாவனைகளால் மட்டும் அன்றிப் பெயர், வாழிடம் ஆகிய பிறவகைகளாலும் தமிழராகவே மாற்றி கொண்டனர். வரலாறு உணர்த்தும் இந்த உண்மையை இன்னும் சிலர் நாட்டில் புரிந்து கொள்ளாமையாலேதான் இன்னும் பல சண்டைகளும் மாறுபாடுகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

பல்லவர் காலத்தில் சமய மாறுபாடு உண்டானமை, உண்மையேயாயினும் அம் மாறுபாடு வேறுபாடற்ற சங்க காலச் சமய நெறியினை வழங்கத் தவறிவிட்டது. வைதிகத்தொடு பிணைந்த பிறிதொரு கலவைச் சமயமே தமிழகத்தில் கால் கொண்டது. அத்துடன் புதுப்புது விதமான கடவுளரும் வழிபடு முறைகளும் புகுந்தன. விநாயகர் வணக்கம் இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும். சைன சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவராகிய, பரஞ்சோதியார் வாதாபியை வென்று அங்கிருந்தவற்றுள் பல பொருள்களைக் கொண்டு வந்தமை போன்று பிள்ளையாரையும் உடன் கொ ண் டு வந்தார். அதனாலேயே 'வாதாபி கணபதிம் பஜே' என்ற வணக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/158&oldid=1359004" இலிருந்து மீள்விக்கப்பட்டது