பக்கம்:தமிழர் வாழ்வு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெண்மை?

41


எத்துணை உயர்ந்தது. இந்த உண்மையை ஆடவர் உலகம் ஓரளவாவது உற்று உணர்ந்து எண்ணினால் அப்பெண்மையைத் தெய்வமாக—நான் முன் சொன்னபடி—கடவுளொடு வைத்து எண்ணிப் போற்றவேண்டியதன் கடமையை உணராதா? வெறும் மகப்பேறு இயந்திரம் என மதிக்கும் மடமை நாட்டில் இன்னும் நீங்கவில்லையே. மாறாக மகப்பேறு சமுதாயத்தை—உயிரினத்தை—வையத்தை வளர்த்துக் காப்பதோடு, அத் தாய்மையே உலகம் என்றென்றும் தியாகத்தில் சிறக்க வழிகாட்டுகின்றதென்னும் உண்மையை உணர்ந்தால் உய்தி உண்டு. உணர வேண்டுவது மனிதனின் தலையாய கடமையாகும்.

பெண்மையும் சமுதாயம்

பெண்மை வாழ்வொடு பிணைந்தது எனக் கண்டோம். அவ்வாழ்வு செம்மையாவதே இப் பெண்மையால்தான் என்பதும் ஓரளவு உண்மையாயிற்று. அப் பெண்மை சமுதாயத்தோடு எவ்வளவு இயைந்து செல்கிறது என்பதைக் காணின் அதன் இன்றியமையா முழுத்தேவையும் நன்கு புலனாகும் என்பது உறுதி. இச் சமுதாயத்தொடு பெண்மை கலந்து உதவுவதைக் காணுமுன் தனி வாழ்வில் அதன் செம்மையைக் காணல் சிறப்புடைத்தாகும்.

வீட்டில் நான் என் பணியைச் செய்துகொண்டே இருப்பேன். என் மேசை மேல் சிட்டுக்குருவி சிறகடித்துப் பறந்து வந்து உட்காரும். நான் இருப்பதைப்பற்றி அது கவலைப்படுவதே கிடையாது. தனியாகவா! இல்லை. ஆணும் பெண்ணும் இணைந்தே உட்காரும். புத்தக வரிசையும் அடுக்கும் அதன் மெத்தையிட்ட நாற்காலிகள். கொஞ்சமும் அச்சமின்றி அவை என்னிடம் பழகும். நானும் உள்ளத்துக் கரவடம் பூணும் மனிதரொடு பழகுவதிலும் இக்குருவிகளிடம் பழகக் கோடி காலம் தவம் செய்திருக்க

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வாழ்வு.pdf/43&oldid=1358266" இலிருந்து மீள்விக்கப்பட்டது