பக்கம்:தமிழர் வீரம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழர் வீரம் பேரும் பெருவாழ்வும் பெற்று விளங்கிற்று. அப் பெருமையை நேரில் அறிந்த அயல் நாட்டான் ஒருவன், " தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டேன்" என்று வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினான். ஆரிய அரசர் இருவர் இவ்வாறு இமயமலையிலே தமிழ்க்கொடி ஏற்றி வீரப்புகழ் பெற்ற வேந்தரை மறந்தாரல்லர் வடநாட்டார். ஒரு தலைமுறை கழிந்தது. பின்னும் தமிழ் வேந்தரது புகழ் மழுங்கவில்லை. ஒரு திருமணப்பந்தரில் ஆரிய மன்னர் பலர் குழுமியிருந்தனர். அவர்களுள் கனகன், விசயன் என்ற இருவர் தமிழரசரைக் குறித்து அசதியாடினர். " தமிழ் நாட்டரசர் படையெடுத்து வந்து, இமயமலையில் வில்லும் புலியும் கயலும் பொறித்த நாளில் எம்மைப் போன்ற வீரசூர வேந்தர்கள் இந் நாட்டில் இல்லைபோலும்" என்று பேசி மகிழ்ந்தார்கள். சேரன் சீற்றம் வடநாட்டினின்றும் வந்த மாதவர் வாயிலாக அவ்வசை மொழியைக் கேட்டான் சேரன் செங்குட்டுவன். அவன் கண் சிவந்தது, கரம் துடித்தது; ' இன்றே வடநாட்டின்மேற் படையெடுப்பேன். தமிழரசைப் பழித்துச் சிறுமை பேசிய மாற்றாரைச் சிறைபிடிப்பேன்; பத்தினி யாகிய கண்ணகிக்கு இமயமலையிற் சிலையெடுப்பேன்; அச் சிலையை அவ்வரசர் தலையில் ஏற்றி வருவேன்” என்று வஞ்சினம் கூறினான். வீரர் ஆரவாரித்தனர். படை திரண்டு எழுந்தது. வஞ்சிமா நகரினின்றும் வஞ்சிமாலை சூடிப் புறப்பட்டான் சேரன். பல நாடும் மலையும் கடந்து ஊக்கமாகச் சென்றது. தமிழ்ச் சேனை. 4. சிலப்பதிகாரம், காடு காண் காதை, 54-55.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/12&oldid=868406" இலிருந்து மீள்விக்கப்பட்டது