பக்கம்:தமிழர் வீரம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கொடி யேற்றம் #1 " காவா நாவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கெனச் சீற்றம் கொண்டுஇச் சேனை செல்வது" என்று அதன் திறமுரைத்தான் சேரன். ஆரியப் படையும் தமிழ்ப் படையும் நீலகிரியையும் கங்கையாற்றையும் கடந்து பகைப்புலம் புகுந்தது தமிழ்ப்படை அங்குக் கனகனும் விசயனும் எட்டு வேந்தரைத் துணைக்கொண்டு சேரனை எதிர்த்தனர். இரு திறத்தார்க்கும் கடும்போர் நிகழ்ந்தது. தமிழ்ப் படையின் வெம்மையைத் தாங்கமாட்டாது கூட்டுச் சேனை நிலை குலைந்து ஒட்டம் பிடித்தது. கனக விசயர் சேரன் கையிற் சிக்கிக் கொண்டார்கள். ஒரு பகலிற் பல வேந்தரைப் புறங் கண்ட சேரன் வெற்றி வீரனாகப் பாசறையில் வீற்றிருந்தான்; இமய மலையிற் போந்து பத்தினிப் படிமத்திற்குரிய சிலை யெடுத்து வருமாறு தன் சேனாபதியை ஏவினான். வீரப் பரிசளிப்பு கங்கையின் தென் கரையில் நட்பரசராகிய கன்னர் தமிழ் மன்னன் தங்குதற்குச் சிறந்ததோர் பாசறை அமைத்திருந்தனர். அங்கு வந்து அமர்ந்தான் சேரன். படை வீரர் பல்லாயிரவர் நிறைந்திருந்தார்கள். அவர்களுள் மாற்றாரை முருக்கி வென்றவர் பலர்; விழுப்புண் பட்டவர் பலர்; செருக்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்ட சூரரின் மைந்தர் பலர். அவரை யெல்லாம் வருக, என்றழைத்தான் வீர மன்னன்; அவரது வரிசையறிந்து பொன்னாலாகிய வாகைப் பூக்களை முகமலர்ந்து பரிசளித்தான். செங்குட்டுவனது செங்கையாற் பரிசு பெற்ற வீரர் செருக்களத்திற் பெற்ற இன்பத்திலும் சிறந்ததோர் இன்ப முற்றனர். 5. சிலப்பதிகாரம், கால்கோட்காதை, 159-162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/13&oldid=868408" இலிருந்து மீள்விக்கப்பட்டது