பக்கம்:தமிழர் வீரம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழர் படைத்திறம் நாற்படை அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை படைத் திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்; புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுமுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான். எல்லாப் படைகளுக்கும் மன்னனே மாபெருந் தலைவன். யானைப் படை நால்வகைப் படைகளில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது யானைப்படை செருக்களத்தில் வீறுகொண்டு வெம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப் படையே. அப்படைவீரர் யானையாட்கள் என்றும், குஞ்சரமல்லர் என்றும் குறிக்கப்பெற்றனர். வலிமை சான்ற அழகிய யானை, பட்டத்து யானை என்று பெயர் பெற்றது. உயர்ந்த மேனியும், ஓங்கிய நடையும், சிறந்த கொம்பும், பரந்த அடியும், சிறிய கண்ணும், செந்நிற வாயும் உடைய யானையே அப் பதவிக்கு உரியதாயிற்று. அரசன், நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படும்பொழுதும், படையெடுக்கும் பொழுதும் பட்டத்து யானைமீதேறிச் செல்வான். அவன் கொடி தாங்கும் தகுதியும் அதற்கே உண்டு. 1. " உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை" -திருக்குறள், 761

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/15&oldid=868411" இலிருந்து மீள்விக்கப்பட்டது