பக்கம்:தமிழர் வீரம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடதிசை வணக்கிய வீரம்

35



அச்சமின்றி வாழுமாறில்லை என்பதை அறிந்தான் நரசிம்மன், பரஞ்சோதி என்னும் பெருஞ் சேனாதிபதியுடன் கலந்தான். "காட்டைக் கலக்கி வேட்டையாடுதல் போன்று புலிகேசனை அவன் நாட்டிற்போந்து அடித்து முடித்தல் வேண்டும்" என்று பரஞ்சோதியார் கூறினார். அப்படியே செய்க எனப் பணித்தான் அரசன். தமிழ்ப் படை திரண்டு எழுந்தது. பரஞ்சோதியார் அப்படையின் தலைவராகப் போர்க்களிற்றின் மீதேறிப் புறப்பட்டார்.

படையெடுப்பு

பல்லவன் படை தன் நாட்டை நோக்கி வரும் பான்மையை ஒற்றர் வாயிலாக அறிந்தான் புலிகேசன், ஏளனம் பேசினான்; "மாமல்லன் மதியிழந்தான்" என்றான். "பல்லவக் காக்கைகள் பல்லாயிரம் வந்தாலும் வாதாபிக் கோட்டையின் ஒரு கல்லை அசைக்க முடியுமா?" என்று அசதியாடினான். அது கேட்ட அமைச்சர் முதலியோர் ஆரவாரித்தனர். வாதாபியில் வீரர் ஆடிப்பாடி அகமகிழ்ந்தார்கள், கள்ளுண்டு களித்திருந்தார்கள்.²

வாதாபி நகரின் புறத்து வந்திறுத்தது தமிழ்ச்சேனை. புலிகேசன் எதிர்த்தான். நெடும்பொழுது இருதிறத்தாரும் கடும்போர் புரிந்தார்கள். பரஞ்சோதியின் முன்னிற்க மாட்டாது சளுக்கர் சேனை பின்னிட்டது. அது கண்ட புலிகேசன் நால்வகைச் சேனையோடும் போர்க்களத்தை விட்டுக் கோட்டையினுள்ளே போயினான்.

வலிமைசான்ற வாதாபிக் கோட்டையை வளைத்தது தமிழ்ச் சேனை. பரஞ்சோதியார் அக்கோட்டையின் மதில்களைத் தாக்கித் தகர்க்கப் பணித்தார். மலை போன்ற


2. "அந்நாட்டுப் படைவீரர் மாற்றார்க்குக் கூற்றுவர்; மதுவை மாந்திப் போர்க்களம் புகுவர்; போர்க்களிறு களுக்கும் மதுவை ஊட்டுவர். தன் படைத்திறத்தால் இறுமாப்புற்ற மன்னன் மற்றைய அரசரை மதிப்பதில்லை" என்று எழுதியுள்ளான் ஹயூந்தாசாங் என்னும் சீனத்துறவி-இந்தியர் வரலாறு, 310-311.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/37&oldid=1297990" இலிருந்து மீள்விக்கப்பட்டது