பக்கம்:தமிழர் வீரம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதிசை வணக்கிய வீரம் 39 முன்னின்று கலிங்க மன்னன் கடும்போர் புரிந்தான். இரு திறத்தாரும் நிகராகச் சமர் புரியும் போது கருணாகரன் ஒரு பெருங்களிற்றின் மேலமர்ந்து காற்றின் வேகத்தோடு போர் முனையிற் புகுந்தான். தமிழ்ச் சேனை ஆரவாரித்தது; உள்ளங் கிளர்ந்தெழுந்து ஊக்கமாகத் தாக்கிற்று. கருணாகரனது வேகத்தைத் தாங்கமாட்டாமல் கலிங்கப் படை நிலை குலைந்தது. மன்னனும் மறைந்தோடி ஒரு மலைக் குகையில் ஒளித்தான். அவனுடைய கரிகளும் பரிகளும், பொன்னும் பொருளும் கருணாகரனுக்கு உரிய வாயின. அவ்வளவில் அமையாது மன்னன் ஆணைப்படி அவன் மாற்றரசனையும் பிடித்துச் செல்ல விரும்பினான்: அவன் ஒடிப் பதுங்கிய மலைக்கோட்டையைத் தேடிக் கண்டு கொண்டான். அதனை வேலாலும் வில்லாலும் வேலி கோலி, இரவு முழுவதும் காத்து நின்றது, தமிழ்ப்படை. பொழுது விடிந்தது; மலையரண் இடிந்தது; மாற்றரசன் பிடிபட்டான். தமிழர் வெற்றி வெற்றி பெற்ற தமிழ்ச் சேனை வீர முழக்கத்தோடு மீண்டது. கலிங்க நாட்டிற் கவர்ந்த பொருள்களையெல்லாம் குலோத்துங்கன் அடிகளில் வைத்து வணங்கினான் கருணாகரன். " கடற்கலிங்கம் எறிந்துசயத் தம்பம் நாட்டிக் கடகரியும் வயமாவும் தனமும் கொண்டு சுடர்க்கதிர்வாள் அபயனடி அருளி னோடும் சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே." இத்தகைய வீரப் புகழ் வாய்ந்த கருணாகரத் தொண்டைமானை ஈன்ற பெருமை சோழநாட்டு வண்டாழஞ்சேரி என்னும் சிற்றுாருக்கு உரியது. அவ்வூர்ப் பெயர் வண்டை என மருவி வழங்கிற்று. ஆதலால், கலிங்க மெறிந்த கருணாகரனை வண்டையர் கோன் தொண்டை மான் என்று தமிழ்க் கவிதை புகழ்ந்து மகிழ்ந்தது. 7. கலிங்கத்துப்பரணி, 471.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/41&oldid=868471" இலிருந்து மீள்விக்கப்பட்டது