பக்கம்:தமிழர் வீரம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழர் வீரம் அந்நிலப் பகுதியில் ஒடிய ஆறும் மலையூர் எனப்பட்டது. எனவே, ஆதியில் தமிழர் ஊருக்கமைத்த பெயர், பின்னர் நாட்டுக்கும் நதிக்கும் முறையே அமைந்ததென்று தோன்றுகின்றது. அத்தீவகத்திலுள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் பண்ணை என்பது. இப்பொழுது அச்சொல் பன்னி என்றும், பனி என்றும் மருவியுள்ளது. இவ்வூர்களையுடைய தீவகத்தை இராஜேந்திரன் கப்பற்படையால் வென்று கைக்கொண்டான். மலைவளம் சுரக்கும் மலாய் நாட்டிலும் தமிழர் வாழ்ந்த இடங்களை அவற்றின் பெயர்களே காட்டும். காழகம் என்பது அந்நாட்டின் ஒரு பகுதி. பழங்காலத்தில் காழகத்தில் விளைந்த பொருள் கடல்வழியாகக் காவிரிப் பூம்பட்டினத்தில் வந்து இறங்கியது. அதுவே கடாரம் என்றும், கேடம் என்றும் நாளடைவில் மருவி வழங்குவதா யிற்று. இப்பொழுது கெடா என்ற பெயரால் குறிக்கப்படும் நாடு அதுவே. இன்னும், தக்கோலம் என்பது மலாய் நாட்டிலுள்ள ஒர் ஊரின் பெயர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அங்குத் தமிழர் வர்த்தக வளம் பெற்று வாழ்ந்தார் என்பது சாசனத்தால் விளங்கும். இவ்வூர் தக்கோபா என்று இக்காலத்தில் வழங்கும். இராஜேந்திரசோழன் கடாரம் முதலிய நாடுகளைக் கப்பற்படையால் வென்றான்; அவ்வெற்றிச் சிறப்பு விளங்கும் வண்ணம் கடாரம் கொண்டான்' என்னும் விருதுப் பெயரும் பூண்டான். கலப்படைத் திறத்தால் கடலாண்ட அக் காவலனை, " தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் தொடுகடற் காவல் கடுமுரண் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்டகோப் பரகேசரி" என்று சாசனம் பாடிற்று. 7. 'ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் - பட்டினப்பாலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/46&oldid=868481" இலிருந்து மீள்விக்கப்பட்டது