பக்கம்:தமிழர் வீரம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழர் வீரம் வேட்டையே அவன் கருத்தை முற்றும் கவர்ந்தது. ஆதலால், நாடாளும் உரிமையைச் சின்ன மருது மேற்கொண்டான் காளையார் கோயிலுக்கு அருகேயுள்ள சிறுவயல் என்ற ஊரைத் தன் இருப்பிடமாகக் கொண்டான் மருது. அவ்வூரில் அரண்மனை எழுந்தது; குடிபடை குழுமின. சில ஆண்டுகளில் சிறுவயல் பல்லாற்றானும் சிறந்த ஊராயிற்று. தமிழ்ப் பாவலர் அவ்வூரை நாடிவந்தனர்; மருதப்பனைப் பாடிப் பரிசு பெற்றனர்; அவன் ஆட்சியில் அமைந்த காட்டின் வழியாக நள்ளிரவில் சென்றாலும் கள்ளர் பயம் இல்லை என்ற பேச்சு எங்கும் பரவியிருந்தது. இத்தகைய கட்டும் காவலும் உடைய தலைவனை மருது பாண்டியன் என்று நாட்டார் பாராட்டினார்கள். அவன் ஆட்சித் திறன் மருதுபாண்டியன் மாளிகையில் விருந்தாளியாக இருந்த ஆங்கிலப் படைத்தலைவன் ஒருவன் அங்குக் கண்ட காட்சியை எழுதியுள்ளான். " சின்ன மருது காட்சிக்கு எளியவன்; கருணை வாய்ந்தவன். இந்நாட்டில் அவன் இட்டது சட்டம். ஆயினும், அவன் மாளிகையில் எவரும் தங்கு தடையின்றிச் செல்லலாம்; அவனைக் காணலாம். வந்தவர் எல்லாம் அவனை வாயார வாழ்த்தினர்' என்பது அப்படைத் தலைவன் வாய்மொழி. இவ்வாறு மருது பாண்டியனோடு உறவாடிய படைத்தலைவனே பின்பு அவன் பகைவனாயினான். பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலப் படையை எதிர்த்த பாளையக்காரனோடு மருது பாண்டியன் உறவு பூண்டிருந்தான். அவ்விருவரும் வீரசுதந்தரம் வேண்டி நின்றார். பிறர் அடிபணிந்து வாழ்வதினும் அடியோடு மடிந்தொழிதல் நன்று என்று கருதிய மானவீரர் அவர், ஆதலால், ஆங்கிலேயரது சீற்றத்திற்கு ஆளாயினர். ஆயினும் மருது பாண்டியனது வல்லரணாகிய காளையார் கோயிலை மாற்றார் எளிதில் கைப்பற்ற முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/60&oldid=868505" இலிருந்து மீள்விக்கப்பட்டது