பக்கம்:தமிழர் வீரம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தமிழர் வீரம் பாண்டியனை ஆதரித்தான். இவற்றையெல்லாம் ஒற்றர் வாயிலாக அறிந்தான் குலோத்துங்கன்; உடனே பாண்டி நாட்டின்மேற் படையெடுத்தான். கீழ்பால் உள்ள நெட்டுரில் இரு திறத்தாரும் எதிர்த்து நின்றார்கள். செருக்களம் செங்களமாயிற்று. பாண்டியன், முன்னணியில் நின்று கடும்போர் புரிந்தான்; வீரமொழியால் மறப்படையை ஊக்கினான். ஆயினும் அவன் சிறுபடை சலிப்புற்றுத் தளர்ந்தது. புலிக்கொடியின் முன்னே மீன் கொடி தாழ்ந்தது. பாண்டியன் மணிமுடி இழந்தான் பட்டத்தரசியையும், படைகளையும் கைவிட்டு ஒட்டம் பிடித்தான். வீரமும், மானமும் விட்டு ஓடிய மன்னவன் தேவியைச் சோழன் சிறைப்பிடித்தான்; தன் வேளத்தில் வைத்தான்." பாணனுக்குப் பாண்டிநாடு நெட்டுர்க்களத்தில் சோழன் பெற்ற வெற்றியின் புகழ் எட்டுத் திசையும் பரந்தது. வாகைமாலை சூடிய வேந்தனை யும் வீரரையும் இசைப்பாட்டில் ஏற்றினான் ஒரு பாணப் புலவன். அப்பாட்டைக் கேட்டான் குலோத்துங்கன்; ஆனந்தமுற்றான், செவிக்குத் தேனெனப் பாணன் வார்த்த தெள்ளிய கவிதையை, "அருந் தமிழ் விருந்து" என்று புகழ்ந்தான். அருகே நின்ற அப் புலவனை நோக்கி, "உன் பாட்டுக்கு ஒரு நாட்டைப் பரிசளிக்க ஆசைப்படுகிறேன்; இப் பாண்டிநாடு இனி உனக்கே உரியது; தந்தேன்' என்றான்." கவிக்குலம் களிப்புற்றுக் கூத்தாடிற்று. "நல்ல பாட்டுக்கு நாட்டைப் பரிசளித்தான் தமிழ் வேந்தன்" என்று பாராட்டினர் ஊரார் எல்லாம். பாணனது நாணம் சோழன் பேசிய புகழுரை கேட்டு நாணினான் பாணப் புலவன். பாண்டி நாட்டின் அரசுரிமையை ஏற்றுக்கொள்ள 9. உயர் குல மாதர்க்குச் சோழர் அமைத்த சிறைக் கோட்டம் வேளம் என்னும் பெயர் பெற்றது. 10. " மதுரை கொண்ட தோள்வலி பாடிய பாணனைப் பாண்டியன் என்று பருமணிப் பட்டம் சூட்டினான்" என்று குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/68&oldid=868514" இலிருந்து மீள்விக்கப்பட்டது