பக்கம்:தமிழர் வீரம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தியாக வீரம். தியாகத்தின் சிறப்பு பிறர்பொருட்டு ஒருவன் தன்னலம் இழக்கும் தகைமையே தியாகம் ஆகும். தமிழகத்தில் என்றும் தியாகத்திற்குத் தனிப் பெருமையுண்டு. "தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்" என்று அத்தகையாரைத் தமிழ்நாடு போற்றுகின்றது. அன்னார் இருத்தலாலே இவ் வுலகம் உள்ளது என்று பாடினான் ஒரு பாண்டியன்' குமணனும் இளங்குமணனும் கொங்குநாட்டின் பெருமையெல்லாம் தன் பெருமை யாக்கிக்கொண்டான் ஒரு கொடைவீரன். அவன் முதிரம் என்னும் மலையை ஆண்ட குறுநில மன்னன். குமணன் என்னும் பெயருடைய அக் கோமகன், இரப்போர்க்கு இல்லை யென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்தவன். அவனைத் தமிழகம் பாட்டாலும் உரையாலும் பாராட்டி மகிழ்ந்தது. அதனை அறிந்தான் அவன் தம்பியாகிய இளங்குமணன். அழுக்காறு அவன் மனத்தை அறுத்தது: முன்னையோர் ஈட்டி வைத்த பணமும், முதிரமலையின் வளமும் கொள்ளை போகின்றனவே என்று அவன் குமுறினான்; தமையனைக் கொல்வதற்குச் சூழ்ச்சி செய்யத் தொடங்கினான். " உண்டால் அம்மஇவ் வுலகம். தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே." - இளம் பெருவழுதி பாடியது. புறநானூறு 182.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/71&oldid=868518" இலிருந்து மீள்விக்கப்பட்டது