பக்கம்:தமிழர் வீரம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. வீரக்கல்



வீரரை வியந்து போற்றிய நாடு தமிழ்நாடு. போர் முனையில் விழுப்புண்பட்டு விழுந்தவர்க்கும், கடும்புலியைத் தாக்கி வென்ற காளையர்க்கும், இன்னோரன்ன வீரம் விளைத்தவர்க்கும் வீரக்கல் நாட்டிச் சிறப்புச் செய்தனர் தமிழ்நாட்டார்.

நடுகல்

வீரருக்கு நாட்டுதற்கேற்ற கல்லை முதலில் தேர்ந்தெடுப்பர்; எடுத்த கல்லைப் புனித நீராட்டுவர்; வீரனுடைய பீடும் பேரும் அதில் எழுதுவர் உரிய இடத்தில் அதனை நாட்டுவர்; மாலையும் மயிற் பீலியும் சூட்டுவர். இவ்வாறு நட்ட கல்லைத் தெய்வமாகக் கொண்டு வணங்குதலும் உண்டு.¹

பத்தினிக் கோயில்

மதுரை மாநகரில் கற்பென்னும் திண்மையால் வீரம் விளைத்தாள் கண்ணகி. அப்பெருமாட்டியை "மாபெரும் பத்தினி” என்றும், "வீர பத்தினி" என்றும் வியந்து புகழ்ந்தது தமிழுலகம்.² சேர நாட்டை யாண்ட செங்குட்டுவன் என்னும் வீர மன்னன் அதையறிந்து விம்மிதமுற்றான்;


1.

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல்"-தொல்காப்பியம்:புறத்திணை 5.

2. "ஆரஞர் உற்ற வீரபத்தினி"- சிலப்பதிகாரம்: பதிகம்,24.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_வீரம்.pdf/93&oldid=1299029" இலிருந்து மீள்விக்கப்பட்டது