பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV. கற்பனை இன்பம்

16. முருகனும் முழுமதியும்

அந்தி மாலையில் விண்ணிலே எழுந்த முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது. பொய்கையிலமைந்த பூங்குமுதம்முகை நெகிழ்ந்து, தேன் துளித்து மலர்ந்தது. மலையத் தெழுந்த இளங்காற்று மெல்லெனத் தவழ்ந்து நறுமணம் கமழ்ந்தது. இத்தகைய அழகு வாய்ந்த அந்திப் பொழுதில், தென்மலைச் சாரலில் மகிழ்ந்து விளையாடிய முருகனென்னும் குமரன், விண்ணிலே ஊர்ந்த வெண் மதியின் அழகினைக் கண்டு குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, முகம் மலர்ந்து அளவிலா இன்பமுற்றான். குறுநடை பயிலும் முருகனைக் கூர்ந்து நோக்கி, வெண்ணிலாவும் நகை முகம் காட்டுவதாயிற்று. தன்னை நோக்கி, முகம் மலர்ந்த தண்மதியை, அருகே போந்து விளையாட அழைத்தான் முருகன். மழலை மொழிகளால் நெடும்பொழுது வருத்தியழைத்தும் வான்மதி வாராதிருக்கக் கண்டு முருகன் கண் பிசைந்து அழுது கரைந்தான்.