பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தமிழ் இன்பம்


வேரூன்றி முளைத்த இடத்தினின்றும் படர்ந்து போந்து, வேங்கையைப்பற்றித் தளிர்த்துப் படர்ந்த கொடியின் தன்மை, மணப்பருவம் வாய்ந்த ஒரு மங்கை, பிறந்த மனையின்றும் போந்து, தலைமகனைச் சேர்ந்து வாழும் தன்மையில் அமைந்திருந்தது. அக் கொடி படர்வதற்கு ஏற்ற கொழுகொம்பாய் அமைந்த வேங்கையின் தோற்றம், ஆண்மையும் பெருமையும் பொருந்தித் திகழும் தலைமகனது விழுமிய நிலைபோல் விளங்கிற்று. அவ் வேங்கையிலே பின்னிப் படர்ந்து அதன் கிளைகளுக்குப் புதியதோர் அழகளித்த கொடியின் கோலம், தலைமகனுடன் ஒன்றி வாழ்ந்து இல்வாழ்க்கைக்கு அழகளிக்கும் குலமங்கையின் தன்மையை நிகர்த்தது. இன்னும், வேங்கை துயர் உற்று ஆற்றில் விழும்போது அதனோடு தானும் துயருறும் நிறையமைந்த மங்கையின் மனப் பான்மையை விளக்கி நின்றது. அந்நிலையில் இளங்கோவடிகள் எழுதிக் காட்டிய கண்ணகியின் வடிவம் எம்மனக் கண்ணெதிரே காட்சியளித்தது.

பெற்றோர் சேர்த்து வைத்த பெருஞ்செல்வம் எல்லாம் பொதுமாதிடம் இழந்து வறியனாய், மாட மதுரையில் மனையாளது மணிச்சிலம்பை விற்று வாணிகம் செய்யுமாறு புகார் நகரினின்றும் புறப்பட்டான் கோவலன். அப்போது மெல்லியல் வாய்ந்த கண்ணகியும் அவனுடன் சென்றாள். கதிரவன் வெம்மையால் உடல்சோர, கரடு முரடான பாதையில் வண்ணச் சீறடிகள் வருந்தக் கானகத்தில் நடந்து போந்த கண்ணகியின் பெருமையைக் கண்டு கோவலன் மனங்குழைந்தான்: