பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவும் திருவும்

143


அவரிடம் அக மலர்ந்தளித்தான். அந் நெல்லிக் கனியினை ஒளவையார் அருந்திய பொழுது அதன் தீஞ்சுவையினை அறிந்தார்; திகைப்புற்றார். அந்நிலையில் அதிகமான் அந்நெல்லிக் கனியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்துச் செழுந்தமிழ்க் கவி பொழியும் செந்நாப் புலவர்க்கு அமுதம் சுரக்கும் அருங்கனியே அமைந்த உணவாகும் என்று மனமகிழ்ந் துரைத்தான். பல நாள் முயன்று வருந்திப் பெற்ற அருங்கனியைத் தானருந்தி இன்புறக்கருதாது, பாடிவந்த கிழவிக்கு அதனைப் பரிசாக அளித்த வள்ளலின் அருங்குணத்தை ஒளவையார் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார்.

"நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கித் தனையே"

'பொன்னொளி மாலை யணிந்த வள்ளலே! அணுகுதற்கரிய மலைவிடரில் அமைந்த இனிய கனியின் அருமையையும் கருதாது. பயனையும் குறியாது. அக்கனியை என்னிடம் உவந்தளித்தனையே! உன் பெருமையை ஏழையேன் எவ்வாறு புகழ்வேன்? பாலாழியில் எழுந்த அமுதினைப் பிறர்க் களித்து, நஞ்சுண்டு கண்டம் கறுத்த செஞ்சடைக் கடவுள் போல் நீயும் என்றென்றும் இவ்வுலகில் வாழ்வாயாக!' என்று நிறைந்த மொழிகளால் ஒளவையார் அருளிய வாழ்த்துரையில் கருநெல்லிக் கனியின் வரலாறும் அதனை