இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அறிவும் திருவும்
145
என்னும் திருக்குறளில் அமைந்த கனியென்னும் சொல் ஒளவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தான கனிகளையே குறிக்குமென்று பரிமேலழகர் விளக்கியருளினார். இன்னும் ஆண்டவனைப் போற்றாது ஆற்ற நாள் போக்கிய புன்மையை நினைந்து வருந்திய திருநாவுக்கரசர்,
"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாடும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக்
காய்கவர்ந்த கள்வ னேனே.”
என்று அருளிய தேவாரத் திருப்பாட்டிலும் கனி என்னுஞ்சொல் அழியாப் பெரு வாழ்வளிக்கும் அமுதக் கனியையே குறிப்பதாகும். இத்தகைய கனியினைப் பெற்றும் அதனைத் தானருந்தி நெடுங்காலம் வாழ விரும்பாது, தக்கார்க் கீந்து இன்பமுற்ற வள்ளலை ஈன்ற தமிழ்நாடு அறநெறியில் தலைசிறந்த தென்பதில் ஐயமுண்டோ?