பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

7


அந் நூலில் படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரைக் காணலாம்; கொடைத்திறம் வாய்ந்த வள்ளல்களைக் காணலாம்; கற்றறிந்து அடங்கிய சான்றோரைக் காணலாம்; பழந்தமிழ்க் குலங்களையும் குடிகளையும் காணலாம். சுருங்கச் சொல்லின், கலைமகளும் திருமகளும் களிநடம் புரிந்த பழந்தமிழ் நாட்டைப் புறநானூற்றிலே காணலாம்.

கவிதையும் காவலரும்

முற்காலத் தமிழ் மன்னரிற் பலர் பொன்மலர், மணமும் பெற்றாற் போன்று, புவிச்செல்வத்தோடு கவிச்செல்வமும் உடையராப் விளங்கினார்கள். முத் தமிழ் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியருள் பலர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலே காணப்படும். கற்பின் செல்வியாகிய கண்ணகியின் சிற்றத்தால் ஆவி துறந்து அழியாப் புகழ் பெற்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், கவிபாடும் திறம் பெற்ற காவலருள் ஒருவன். மக்களாகப் பிறந்தோரெல்லாம் கல்வி கற்று மேம்படல் வேண்டும் என்ற ஆசையை அம் மன்னன் ஒரு பாட்டால் அறிவிக்கின்றான்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்ற பாட்டு, அவ்வார்வத்தைக் காட்டுகின்றது.

இனி, சோழநாட்டு அரசனாகிய கோப்பெருஞ்சோழனைச் சிறிது பார்ப்போம். அவனும் கவிபாடும் திறம் பெற்றவன்; தமிழுணர்ந்த புலவவர்களைத் தக்கவாறு போற்றியவன். அச்சோழன், செல்வத்திலே தனக்கு நிகரான ஒருவரைத் தோழராகக் கொண்டான்