பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தமிழ் இன்பம்


இவ்வாறு பாரி ஒருவனையே பலரும் புகழக் கண்ட பாண்டியனும் மற்றைய இருபெரு வேந்தரும். பெரிதும் அழுக்காறு கொண்டு அவனது பறம்பைத் தம் படையால் முற்றுகையிட்டார்கள். பல நாள் முற்றியும் பாரியின் பறம்பைக் கவர இயலாது காவலர் மூவரும் கலக்கமுற்றனர். நால்வகைச் சேனையின் நடுவே நின்ற மன்னரை நோக்கி, "ஐயன்மீர்! பாரியின் மலையிலுள்ள ஒவ்வொரு மரத்திலும் உம்முடைய களிறுகளைக் கட்டுவீராயினும், பரந்த பறம்பெங்கும் உமது தேரை நிரப்புவீராயினும் படை வலியால் பாரியை வெல்ல இயலாது. அவனை வென்று பறம்பைக் கவரும் வகையையான் அறிவேன். நல்ல யாழைக் கையி லேந்தி இன்னிசைப் பாட்டு இசைப்பீராயின், பாரி தன் நாட்டையும் மலையையும் ஒருங்கே தருவன். இதுவே அவனை வெல்லுதற்குரிய வழியாகும்" என்று பாரியின் வண்மையைப் புகழ்ந்தும், மூவேந்தரது வன்மையை இகழ்ந்தும் கபிலர் நயம்பட உரைத்தார்.

இங்ஙனம் இசை வழியாகப் பாரியை வெல்ல இசையாத மூவேந்தரும், வசை யாற்றால் அவனை வென்றதாக அப்பெருந்தகையின் வரலாறு கூறுகின்றது. தஞ்சம் அடைந்தோரைத் தாங்கும் தண்ணளி வாய்ந்த வள்ளலை வஞ்சனையாற் கொன்று மூவேந்தரும் அழியாப் பெரும்பழியெய்தினர். பாரியைக் கொன்று பறம்பைக் கைப்பற்றிய பகைவேந்தர் செயல் கண்டு மனம் பதைத்த பாரி மகளிர்,

“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்