பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவும் திருவும்

165


முதிரமலை வள்ளலை மனமொழி மெய்களால் வாழ்த்திப் போற்றினார்கள்.

குமணனிடம் பரிசு பெற்ற புலவர்கள். பற்றுள்ளம் செய்யும் மற்றைய சிற்றரசர் சிறுமையை அவ்வள்ளவின் வண்மையோடு ஒப்பு நோக்கிப் பழித்துரைத்தார்கள். இளவெளிமான் என்னும் சிற்றரசனிடம் பரிசு பெறச் சென்ற புலவர் ஒருவர் அவனது எளிய கொடையை ஏற்றுக்கொள்ளாது மறுத்து, குமண வள்ளலிடம் சென்று யானைப் பரிசு பெற்று, மீண்டும் இளவெளிமானிடம் போந்து,

"இரவலர் புரவலை நீயு மல்லை
புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்
இரவலர் உண்மையும் காண், இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண். இனி நின்னுார்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே!”

“அரசே! இரப்போர்க் கீந்து பாதுகாப்போன் நீயுமல்லை; இரப்போரைப் புரப்போர் இவ்வுலகில் இல்லை யென்பதும் இல்லை. இரப்போரைக் காப்போர் இவ்வுலகில் உண்டென்னும் உண்மையை இப்பொழுதே காண்பாயாக. நின்னுார்க் காவல் மரம் வருந்த யாம் கட்டிப் போந்த களிறு குமண வள்ளல் கொடுத்த கொடையாகும். இனி யான் என் ஊரை நோக்கிச் செல்வேன்" என்று செம்மாந்து உரைத்த புலவர் மொழிகளில் குமணனது பரிசின் செம்மை சீர்பெற இலங்குகின்றது.

இவ்வாறு பாடி வந்த பாவலர்க்குப் பகடு பரிசளித்தும் ஆற்றாரது அரும்பசி களைந்தும்,வற்றாத