பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழியும் நெறியும்

173


"அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்
அவ்வவர்க்கு ஆங்கே ஆரருள் புரிந்து"

என்னும் தேவாரம் இவ்வுண்மையை நன்குணர்த்துகின்றது. அறிவிற் குறைந்தவர்கள் புதிய சமயங்களை வகுத்து எங்கும் பரப்பினாலும் குற்றம் இல்லை.

"விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்"

என்று பாடினார் திருநாவுக்கரசர். ஆகவே, சமயத்தின் பேரால் நிகழும் பிணக்கங்களும் போர்களும் சைவ நெறிக்கு மாறுபட்டன என்பது தெள்ளிதின் விளங்கும்.

சைவ நெறியில் சமயப்பொறுமை சிறந்த கொள்கையாக விளங்கிற்றென்பதற்குச் சிலப்பதிகாரம் சான்று தருகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரநாட்டு இளவரசர். அவர் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாது சமண சமயத் துறவியாயினர். ஆனால், அவருடன் பிறந்த சேரன் செங்குட்டுவன் சிறந்த சைவனாய் விளங்கினான். இங்ஙனம் தமையன் சைவ சமயத்தையும், தம்பி சமண சமயத்தையும் மேற் கொண்டு ஒரு குடும்பத்தில் இணக்கமாக வாழ்ந்த நாட்டில், சமயப் பொறுமை நிலைத்திருந்த தென்பதை விரித்துரைக்கவும் வேண்டுமோ?

சைவ சமயத்தின் முடிவுகளைச் சைவ சித்தாந்தம் என்பர். அச்சித்தாந்தத்தின்படி, அநாதியாகவுள்ள பொருள் மூன்று. அவற்றைத் திரி பதார்த்தம் என்பர். பதி, பசு, பாசம் என்ற மூன்றும் திரி பதார்த்தம் எனப்படும். பதி என்பது கடவுள்; பசு என்பது உயிர்; பாசம் என்பது கட்டு. உயிர், பாசத்திலிருந்து விடுபட்ட