பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தமிழ் இன்பம்


ஆர்வம் கொண்டார். அன்னார்க்கு அடியவராக ஆசைப்பட்டார். அவ் ஆசையால் எழுந்ததே 'திருத்தொண்டத் தொகை' என்னும் அருமைத் திருப்பதிகம். அதன் அடியாகவே பிற்காலத்தில் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் தமிழ் நாட்டிலே பிறந்தது. ஆகவே, பெளத்த சங்கத்திற்கு நிகராகிய திருக்கூட்டத்தால் சைவ சமயம் அளவிறந்த நன்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.

தமிழ் நாட்டில் அரச மரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அரச மரமும் பிள்ளையாரும் இல்லாத ஊர் இந்நாட்டில் இல்லை என்றே சொல்லலாம். அம்மரத்தைச் சுற்றி வந்து வணங்கும் வழக்கமும் இந்நாட்டில் உள்ளது. முன்னாளில் இங்குப் பரவியிருந்த பெளத்த சமயத்தால் அம் மரத்திற்கு இத்துணைச் சிறப்பு ஏற்பட்டதாகத் தோன்றுகின்றது. 'போதி மரம்' என்று சொல்லப்படும் அரச மரத்தின் அடியிலே புத்தர் மெய்ஞ்ஞானம் பெற்றார். அதனால் 'போதி நாதர்' என்ற பெயரும் அவருக்கு அமைந்தது. இத்தகைய புத்தரை அரச மரத்தடியில் வைத்துப் பண்டைத் தமிழர் வணங்கினர். புத்தரொடு சேர்ந்த மரமும் புனித முற்றதாகப் போற்றப்பட்டது. புத்த மதம் இந்நாட்டை விட்டகன்றபோது புத்த பெருமானுடைய திருவுருவங்களும் பெயர்ந்து மறைந்தன. ஆனால், அரச மரத்தின் பெருமை குன்றவில்லை. புத்தர் வீற்றிருந்த இடத்தில் 'பிள்ளையார் இனிதமர்ந்தார்.

ஆகவே, புத்த மதம் ஆதிக்க மழிந்து போய் விட்டாலும், அதன் சின்னங்கள் அடியோடு இந் நாட்டில் அழிந்து போகவில்லை. பஞ்ச காவியங்களில்