பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழியும் நெறியும்

189


பருந்துக்குத் தீங்கிழைப்போர் மாயோன் நேமிக்கு விருந்தாவர். எனவே, பறவை இனங்களும் பெரியாரைச் சார்ந்து அச்சமின்றி வாழ்கின்றன.

இன்னும், சிறிய உயிர்களாய அணிலும், ஆகுவும், குரங்கும், கழுதையும் பெரியார் அருளால் பெருமையுற்று விளங்கக் காணலாம். அணிற்பிள்ளை, காலத்தில் உதவி செய்து இராமனது அருளைப் பெற்றது. ஆகுவோ பிள்ளையார் வாகனமாய்ப் பெருமை புற்றது. வானரம், இராமனுக்குத் துணை புரிந்து உயர்ந்தது. கத்தும் கழுதையோ, மூத்தாள் வாகனமாய் அமைந்தது. திருமால் மச்சாவதாரம் கொண்டமையால், மீன் இனங்களையும் ஈனமென்றெண்ணி ஊறு செய்தல் ஆகாது.

இனி, மரங்களின் உயிரை ஆன்றோர் பாதுகாத்த மாண்பும் அறிந்து மகிழத் தக்கதாகும். இனிய நிழல் தரும் மரங்களின் அடியில் இறையவரை அமைத்துப் பழந்தமிழ் நாடு வழிபட்டது. குற்றாலநாதர் குறும்பலாவின்கீழ் அமர்ந்தார். நெல்வேலியப்பர் வேணுவின் அடியில் வீற்றிருந்தார். மதுரேசர் கடம்ப வனத்தில் களித்தமர்ந்தார். தில்லைவனத்தில் அழகிய கூத்தர் திளைத்தார். மரமடர்ந்த வனங்கள் பிற்காலத்தில் நகரங்களாகச் சிறந்தபொழுது குறும்பலாவனம் திருக்குற்றாலமாகவும், வேணுவனம் திருநெல்வேலியாகவும், கடம்பவனம் மதுரையாகவும், தில்லைவனம் சிதம்பரமாகவும் திகழ்வனவாயின. முன்னாளில் கல்லாலின்கீழ் அமர்ந்து இறையனார் அறமுரைத்தார். அரசமரத்தடியில் அமர்ந்து கெளதம புத்தர் அரிய உண்மைகளை அறிந்தார். அசோக மரத்தடியில்