இருமையில் ஒருமை
203
கவர்ந்து அசோக வனத்தில் வைத்தான். மங்கையைப் பிரிந்த மன்னன் மலையும் காடும் அலைந்து திரிந்து மதங்க வனத்தில் வானரத் தலைவனைத் துணைக் கொண்டு. கடல் சூழ்ந்த இலங்கையில் தன் காதலி சிறையிருந்ததை அறிந்து, கருங்கடலைக் கடப்பதற்குக் கல்லால் அணை அமைத்து, வானர சேனையோடு இலங்கையின் நகர்ப்புறம் எய்தினான். ஆயினும், தனக்குத் தவறிழைத்த இலங்கை வேந்தன் மீது போர் தொடங்கு முன்னே, அம் மன்னன், சீதையை விடுவானா என்று அறியுமாறு அங்கதனை அவனிடம் தூதனுப்பக் கருதினான். இவ்வாறே சூதினால் அரசிழந்து, பன்னிராண்டு படர்கானகத்தில் துயர் உழந்து, அப்பால் ஒராண்டு ஒருவரு மறியாது ஊர் நடுவே கரந்துறைந்து முடிந்த பின்னும், வழிக்கு வாராத வணங்காமுடி மன்னன் மீது படையெடுக்கு முன்னே குருகுல மன்னன் கண்ணனைத் தூதனுப்பிக் கடும்போர் விலக்கக் கருதினான்.
விதிக்கும் விதியாகும் வில்லைத் தாங்கிய இலக்குவனைத் துணைக்கொண்ட இணையற்ற இராம வீரன் இலங்கை நாதனுடை புயவலியும் படைவலியும் கண்டு பயந்து அவன்பால் தூதனுப்பினான் அல்லன். அவ்வாறே தண்டேந்திய வீமனையும் தனுவேந்திய விசயனையும் துணையாகக் கொண்ட தருமன், நூற்றுவராய் விளங்கிய மாற்றார் படைவலி கண்டு கலங்கிக் கண்ணனைத் தூதனுப்பினான் அல்லன். குடும்போரால் விளையும் கொடுமையையும் கொலையையும் விலக்கக் கருதிய விழுமிய அருளாலேயே இருவரும் மானமும் கருதாது தூதுபோக்கினார் என்பது இனிது விளங்கும்.