பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/254

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியார் பாட்டின்பம்

245


இத் தகைய பழம் பெருமை வாய்ந்த பைந்தமிழ் நாட்டிற் பிறந்தும், தமிழ்மொழியின் பெருமையையும் இனிமையையும் உணராது, வறிதே காலம் கழிக்கும் இக் காலத் தமிழ் மக்கள் நிலை கண்டு பாரதியார் இரங்குகின்றார். முன்னோர் முயன்று தேடித்தந்த முழு மணிகள் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடப்ப, அவர் பின்னோராய நாம் வறிஞராய் இவ்வுலகில் வாழ்கின் றோம்; பாலிருந்த பானையைப் பாற்பானை என்பது போல், தமிழறிஞர் மரபிற் பிறந்த நம்மையும் தமிழரெனப் பிறநாட்டார் அழைக்கின்றார்கள். இங்ஙனம் வாயிருந்தும் ஊமையராய், கண்ணிருந்தும் குருடராய், செவியிருந்தும் செவிடராய்த் திரியும் இக் காலத் தமிழ் மக்களை நோக்கி,

"நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்;
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"

என்று கவிஞர் பரிவுடன் வேண்டுகின்றார். நறுஞ்சுவை நிறைந்த தமிழின் நீர்மையைத் தமிழ் மக்கள் அறிந்து மகிழ்தல் வேண்டும். 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் முன்னோர் மொழியின் வழி நின்று இனிமை வாய்ந்த தமிழ் மொழியை யாண்டும் பரப்புதல் வேண்டும். "வீடு தோறும் தமிழின் முழக்கம்: வீதி தோறும் தமிழின் விளக்கம்; நகரமெங்கும் தமிழோசை நாடு எங்கும் தமிழோசை." இவ்வாறாக எங்கும் தமிழ் முழக்கமே பெருமுழக்கமாய்ப் பொங்கி எழுதல் வேண்டுமென்பது பாரதியாரது பெரு விருப்பமாகும்.