254
தமிழ் இன்பம்
வெம்மையை நாவுக்கரசர் தம் மனச்செம்மையால் வென்றார்.
“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே”
என்னும் பாட்டு அந்நிலையில் அப்பரால் பாடப்பட்டதாகும். ஏழு நாள் நீற்றறையில் ஏதமின்றி இருந்து வெளிப்பட்ட நிலையிலும் அவர் பெருமையை அரசன் அறிந்தா னல்லன்; பல நாள் உணவின்றி யிருந்த அப்பரது பசியைத் தீர்ப்பான்போல் நஞ்சு கலந்து பாற்சோற்றை அவருக்கு ஊட்டுமாறு பணித்தான். அரசனுடைய ஏவலாளர் நஞ்சு தோய்ந்த அன்னத்தை அப்பர் முன்னே படைத்து நயவஞ்சகம் பேசி நின்றார். ஆருயிர் மருந்து எனப்படும் அன்னத்தில் நஞ்சு கலந்த மாந்தரை நாவுக்கரசர் பகைவரெனக் கருதினாரல்லர்; நண்பரெனவே கருதினார்; அவரிட்ட சோற்றை உண்டு மகிழ்ந்தார். இங்ஙணம் பகைவரிட்ட நஞ்சையும் நண்பரிட்ட நல்லமுதெனக் கருதி யுண்ட நாவுக்கரசர்,
"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”
என்னும் திருக்குறளுக்கு நனி சிறந்த சான்றாயினார். இவ்வாறு நாவுக்கரசர் ஆற்றிய அருஞ் செயலை வள்ளுவர் அருளிய கருத்தோடு கலந்து,
"நச்சைவாயி லேகொணர்ந்து நண்பர்ஊட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
என்று பாரதியார் நல்ல தமிழ் விருந்தளித்தார்.