34
தமிழ் இன்பம்
அன்பர்களே! தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் பழமையான தொடர்புண்டு. தமிழ் இலக்கியமே இதற்குச் சான்று. பண்டமாற்று முறையிலும், பண்பாட்டு முறையிலும் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும். இடையேயிருந்த உறவு சங்கநூல்களிலும் பிற்காலத்துப் பெருநூல்களிலும் பேசப்படுகின்றது. சங்கத்தமிழில் ஈழநாடு என்பது இலங்கையின் பெயர். பட்டினப் பாலை என்னும் பழந்தமிழ்ப் பாட்டிலேயே சோழ நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் இருந்த வாணிக உறவு குறிக்கப்படுகின்றது. அந் நாளில் பட்டினம் என்றால் தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினமே! சோழ நாட்டை ஊட்டி வளர்க்கின்ற காவிரியாறு கடலோடு கலக்கு மிடத்தில் காவரிப்பூம்பட்டினம் என்னும் திருநகரம் அமைந்திருந்தது. அதன் செழுமையையும் அழகையும் கண்டு மகிழ்ந்த செந்தமிழ்ப் புலவர்கள் பூம்புகார் என்றும் அதனைப் போற்றுவராயினர். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள், "பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்" என்று பாடினார். அந்நகரத்தின் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இயைறாது நிகழ்ந்தன. கடல் கடந்து பிற நாடுகளிலிருந்து அங்கு வந்திறங்கிய பண்டங்களைப் பட்டினப்பாலை தொகுத்துக் கூறுகின்றது. அந்த வரிசையில் ஈழ நாட்டுப் பண்டமும் இடம் பெற்றுள்ளது. "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்” பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய பண்டங்களென்று அப்பாட்டு கூறுகின்றது. ஈழநாட்டிலிருந்து என்ன உணவுப் பொருள்கள் தமிழ்நாட்டுக்கு இறக்குமதியாயின என்று இப்போது தெளிவாகத்தெரியவில்லை. ஆயினும் பண்டமாற்றுமுறையில் சோழவள நாடு விரும்பி யேற்றுக்கொண்ட உணவுப் பொருள்கள் இலங்கை யிலிருந்து வந்தன என்பது ஒரு பெருஞ் சிறப்பன்றோ?