36
தமிழ் இன்பம்
பொடு பூசனை செய்தானென்றும், அதனால் மழை தவறாமல் பெய்து, ஈழநாடு, 'வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்' றென்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. இன்றும் கண்டி முதலிய பல இடங்களில் கண்ணகி வழிபாடு நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது. முன்னமே வாணிகத்தால் இணைக்கப்பெற்றிருந்த தமிழகமும் இலங்கையும் கண்ணகி காலந்தொட்டு வழிபாட்டு முறையிலும் இணக்கமுற்றன.
இன்னும் இலங்கைக்கும், தமிழகத்திற்கும், ஆன்மநேய ஒருமைப்பாடும் உண்டு. சிவ மணமும், தமிழ் மணமும் ஒருங்கே கமழும் தேவாரம் பாடிய பெரியோர்கள் இலங்கையில் உள்ள சிறந்த சிவஸ்தலங் களைப் பாடியுள்ளார்கள். கடலருகேயுள்ள திருக்கோண மலையைப் பாடினார் திருஞான சம்பந்தர். மாதோட்டம் என்னும் நன்னகரில் அமைந்த மாதொரு பாகனைத் தொழுது பாமாலை அணிந்தனர் திருஞான சம்பந்தரும் சுந்தரரும். தமிழ்நாட்டிலுள்ள முருகனடியார்கள். இலங்கையரிலுள்ள கதிர்காமத்தை நினைக்குந் தொறும் காதலாகிக் கசிந்து கண்ணிர் பெருக்குவர். அப்படியே ஈழநாட்டிலுள்ள சிவனடியார்க்குச் சிதம்பரமே சிறந்த திருக்கோயில், அன்னார் தில்லைமன்றிலே திருநடம்புரியும் 'செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்' எனச் சிந்தையாரப் போற்றுவர்; தமிழகத்தில் முருகப் பெருமானுடைய படை வீடுகளாகப் போற்றப்படும் ஆறு பதிகளையும் அகனமர்ந்து ஏத்துவர்; அவற்றுள், "உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய்” என்று திருமுருகாற்றுப் படையில் புகழப்பெற்ற திருச்செந்தூரை நினைந்து நெக்கு நெக்குருகுவர்.