பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயற்கை இன்பம்

69


அங்காடி நடைபெற்றது. அந்தியில் நடைபெற்ற அங்காடியை அல்லங்காடி என்றும், பகலில் நடைபெற்ற அங்காடியை நாளங்காடி என்றும் அழைத்தனர். பட்டினத்தடிகள் அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார். "அங்காடி நாய்போல், அலைந்து திரிந்தேனே' என்பது அவர் பாட்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்றும் அங்கடி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு. தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்? செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு 'அணிகல அங்காடி' என்று பெயரிட்டுள்ளார். சென்னையிலுள்ள மூர் மார்க்கட்டை, மூரங்காடி என்று வழங்கும் நாள் எந்நாளோ?

பைத்தியக்காரனுக்குத் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் உண்டு. படித்தவர்கள் அவனைப் பித்தன் என்பார்கள்; பித்துக்கொண்டவன் என்னும் பொருள் நன்றாகத் தோன்றும்படி பித்துக்கொள்ளி என்றும் சொல்லுவார்கள். கிறுக்கன் என்பதும் அவனையே குறிக்கும். திருநெல்வேலியிலே பைத்தியக்காரனைக் கோட்டிக்காரன் என்பர். கோட்டி என்பது நல்ல தமிழ்ச் சொல். கோட்டம் என்றால், வளைவு அல்லது கோணல். மனத்திலே உள்ள கோணல் மனக்கோட்டம் எனப்படும். பேச்சிலே வளைவு நெளிவு காணப்பட்டால் அதைச் சொற்கோட்டம் என்பர். இவ்விருவகைக் கோட்டத்தையும் திருவள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார். 'சொற்கோட்டி மில்லது செப்பம்; ஒருதலையா உட்கோட்ட மின்மை பெறின்'