பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயற்கை இன்பம்

71


சொல்லை ஆராய்ந்தால் அஃது ஒரு பழமையான தமிழ்ச் சொல்லின் சிதைவு என்பது புலனாகும். தமிழ் இலக்கியத்தில் மலையில் வாழும் வகுப்பார்க்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று புளிஞர் என்பது. புளிஞர் என்ற சொல்லைக் கம்பர் எடுத்தாள்கின்றார். மறைந்து நின்று அம்பெய்த இராமனை நோக்கி,

'வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால்

எவ்விய தென்னை'

என்று வாலி கேட்டான் என்பது கம்பர் பாட்டு. புளிஞன் என்ற சொல்லே பளிங்கன் என்று மருவி வழங்குகின்றது.

தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப் பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகராக விளங்கிற்று. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, தென்னாடு முத்துடைத்து என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக்குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கின்றார்கள்.