பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தமிழ் இன்பம்


விண்ணுலகம் அடைந்தாள் என்று அறிந்த செங்குட்டுவன், அவளுக்குத் தன் தலைநகரத்தில் ஒரு கோயில் கட்டினான்; இமயமலையிலிருந்து சிலை எடுத்து வந்து, கண்ணகியின் திருவுருவம் செய்து, அக்கோயிலில் நிறுவினான்; அத்திருவிழாவைக் கான அயல் நாட்டு அரசர் சிலரை அழைத்திருந்தான்.

“அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்”

அங்கு வந்திருந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.

இக் காட்சிகளை யெல்லாம் கண் களிப்பக் கண்டார் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோ. அவர் செந்தமிழ்ச் செல்வர்; இளவரசுக்குரிய பதவியை உதறி யெறிந்து, முனிவராயிருந்து தவம் புரிந்தவர். அவர் அரச குலத்திற் பிறந்த பெருமையும், துறவு பூண்டு ஆற்றிய தவத்தின் அருமையும் தோன்ற அவரை 'இளங்கோ அடிகள்' என்று தமிழுலகம் பாராட்டுவதாயிற்று. சிலப்பதிகாரம் பாடியவர் அவரே. இளங்கோ அடிகள் இயற்றிய காவியத்தை, 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' என்று போற்றினார் பாரதியார்.

"சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார வளித்ததும் தருமம் வளர்த்ததும்
...............................................
அன்ன யாவும் அறிந்திலர் பாரதர்