பக்கம்:தமிழின எழுச்சி.pdf/102

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 101


இனி, பெரும்பாலும் ஒரு கட்சி என்றும் சம இரண்டாகப்பிரியவே முடியாது, ஒரு மரத்தினின்று எத்தனைக் கிளைகள்தாம் பிரிந்தாலும், அத்தனைக் கிளைகளினும் ஒன்றேனும் அவ்வடிமரம் போலும் பருமையும் வலிவுமுடையதாக இருக்கவே முடியாது. தமக்குள்கொள்கைச் சிதைவுகளை ஏற்படுத்திக்கொண்டால் தவிர, தாய்க் கட்சியினின்று. ஒரே கொள்கையின் அடிப்படையில், இடையில் ஏற்படும் ஓரிரண்டு அடிப்படைத் தவறுகளுக்காகப், பிரிந்து போகும் பல்வேறு கட்சிகள் எந்த நிலையினும் ஒன்றிணைய முடியாது. மேலும், முழுக்க முழுக்க அரசியலுக்காகவே தோற்றுவிக்கப்பெற்ற கட்சிகள் என்பவை வேறு! மொழி, இன மரபுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப் பெற்ற அரசியல் கட்சிகள் என்பவை வேறு. இரண்டாம் நிலை அரசியல் கட்சி களில் உள்ளுடைவு ஏற்படுமானால், அவை கட்டிக்காக்கப் போவதாகக் கூறும் மொழி, இன மரபுக் கொள்கைகள் சுக்கு நூறாகச் சிதைந்து போவது உறுதி. முதல்நிலை அரசியல் கட்சிகளின் முடிவு அத்தகைய தன்று. இதன் வேறுபாடுகளை உணர்ந்துகொள்ளாத தன்னிலை மேம்பாட்டு உணர்வாளர்களே, சட்டென்று ஓரியக்கத்தினின்று விலகியோடுவதும், தனித்தனிக் கட்சிகளைத் தொடங்கித் தலைமைப் போராட்டப் போர்களில் சிக்கிச் சிதைந்து போவதுமான நிலையில் உள்ளவர்கள்.

இன்னும் விளக்கமாகச் சொன்னால், தவறுகள் எனப்படுவன எந்த நிலையிலும் எவராலும் செய்யப்படலாம். உலகில் குறைந்த தவறுகளைச் செய்பவர்கள் நிறைந்த தவறுகளைச் செய்பவர்கள் என இரு வேறு வகையினராக மக்கள் இருக்கின்றனரே யல்லாமல், தவறுகளே செய்யாமல் ஒருவருமே இருக்கமுடியாது. பிறவிக்கு அடிப்படை தவறுகளே! உயிர், மன, மொழி, மெய், அறிவு, கால, இடம் எனும் நிலைகளில் தவறுகள் பலவகையானவை. அவற்றில் சில பிறரால் அறியப்படுவனவாகலாம்; பல அறியப்படாதனவாகலாம். இனி, தவறுகள் பொதுவாகலான் அவை தண்டனைக்குரியனவாக இருக்க கூடாவென்பதன்று; தவறுகள் தண்டனைக்குரியனவே. ஆனால், அத்தவறுகளைத் தவறுகள் என்று சுட்டத்தெரிந்தவனும், அவற்றுக்குத் தண்டனைகள் தர விரும்புகிறவனும், அத்தவறுகளைத் தன்னளவில் செய்யாதவனாக இருத்தல் வேண்டும் என்பதே அறம். இதுவே உலக இயற்கை. இதனடிப்படையிலேயே அரசியலுணர்வு மக்களிடையே எழுச்சி பெற்றுள்ளது. ஒரு பொருளை இரண்டாகச் சிதைக்கும் மற்றொரு பொருள், அம்முயற்சியின் பொழுது தன்னளவில் இரண்டாகச் சிதைந்துவிடக் கூடாததாக இருத்தல்வேண்டும். இல்லெனின் பயன் விளையாது.