பக்கம்:தமிழின எழுச்சி.pdf/103

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102 - தமிழின எழுச்சி


இனி, மெய்ப் பொருளியலின்படி, அறநிலைக்கு மொழி, இன முன்னேற்ற முயற்சிகள் மாறுபட்டவை அல்ல. எனவே, அம்முயற்சிகளை முன்னின்று செய்வான் ஒருவன், அரசியல் நிலையில் சிற்சில தவறுகளைச் செய்வானாயின், அவனை மேலும் அணுக்க நின்று திருத்த முற்படுவதே பொதுநலங்கருதும் அறமுடையார் கொள்கை. அறவுணர்வு குன்றிய தந்நல வுணர்வாளர்களே, அவன் போக்குகளின் வலிமை, மெலிமை உணராமல், அவற்றைப் புறங்காட்டி. அப்பெரு நிலை முயற்சி கட்டுக்குலைந்து போகுமாறு, அவனை விட்டு விலகி யோடுவர். இந்நிலைகளையெல்லாம் அடியூன்றப் பார்க்கவியலா நம் தலைவர்கள் சிலர், முன்னடி வைப்பார். ஓரிருவரின் முயற்சிக்கு ஊறு விளைவிப்பது இரங்கத்தக்கதும், வருந்தத் தக்கதுமாகும், இனி, உலகின் நிலைப்பு நிலையொட்டிய உண்மை முயற்சிகளைச் சிதைக்கின்ற போக்குகளைத் தமிழர்கள் இனியேனும் தடைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இறுதியாகப் புதுக்கட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள திரு. நெடுஞ்செழியன் போன்றார்க்கு நாம் கூறிக்கொள்வது, இதுதான். நீங்கள் இதுநாள்வரை கட்டிக்காத்த ஒரு பேரியக்கத்தை வெறும் அரசியல் இயக்கமாக கருதியது முதற்பிழை, அதன் தலைமையில் தவறு கண்டவிடத்து அதனை விலக்கவியலாமல் நீங்கள் விலகி வந்தது இரண்டாம் பிழை. அதனை மாற்றியமைக்கும் ஆற்றல் உங்களுக் கில்லாதிருப்பது உண்மையாயின், அதன் வலிமையை இடைக் காலத்தில் ஒப்புக்கொண்டு அதற்கு உங்கள் ஒத்துழைப்பைத் தந்து, காலத்தால் களைய விரும்பி அப்பிழைகளை இடங்கண்டு களையும் வாய்ப்பை இழந்துபோனது மூன்றாம் பிழை.

இனி, திரு. நெடுஞ்செழியனார்க்கும், திரு. அருட்செல்வர்க்கும் நாம் முடிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றவை இவை: பெரியார் முயற்சியை இரண்டாய்ப் பிளந்த குற்றத்திற்காக இன்னும் நீங்கள் எத்தனையோ கழுவாய்களில் உங்கள் கொள்கைகளைக் கழுவ வேண்டியிருக்கும். ஒன்றுபடத் துடிக்கும் தமிழினத் துண்டங்களை உங்கள் தவறுகளால் மீண்டும் மீண்டும் துணுக்குகளாகச் சிதைக்கின்ற பிழைகளை இனியும் செய்யவேண்டா. அனைவரின் மன வேறுபாடுகளையும் அடியோடு மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள். தமிழினத்தின் பொது மானம் கருதி முனையவேண்டியவிடத்து, உங்கள் தனி மான உணர்வுகளைப் பெரிதாக நினைக்கவேண்டா. முடிந்தால் நீங்கள் இருவரும் ஒன்றுபட்டு, இனச் சிதைவையும் ஒன்றுபடுத்துங்கள். நீங்கள் செய்வது அரசியல் முயற்சிகள் அல்ல; மொழி, இன முன்னேற்ற முயற்சிகள் என்பதை என்றும் மறந்து போய்விடாதீர்கள்! தேவையானால் அரசியலை விட்டு விலகிக்கூட இனத்துக்காகப் பாடுபட நாம்