பக்கம்:தமிழின எழுச்சி.pdf/112

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 111

அவை ஆக்கத்தை நோக்கியனவாக இருத்தல் வேண்டும். சோறு சமைப்பதில் சண்டையிட்டுக்கொண்டு சோற்றுப் பானையையே உடைத்து விடக்கூடாது. நாம் கொள்ளும் கருத்து வேறுபாடுகள் மனவேறுபாடுகளாகி நாம் கொண்ட கொள்கையே தவறு என்று பிறர் கருதி விடும்படியோ, அதனை நாமே அழித்துக் கொள்ளும்படியோ இருந்து விடல் ஆகாது. வண்டியை எந்தப் பாதையில் செலுத்தினாலும் நம் கொள்கை இலக்கின் திசை நோக்கி அதனைச் செலுத்தத் தவறி விடக்கூடாது; “கொள்கை முன் நாம் பின்” என்னும் போக்கே ஓர் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் உரஞ்சான்றது. நம்மை முன்வைத்துக் கொள்கையைப் பின்னுக்குத் தள்ளி எந்தப் பொதுவுணர்விலும் நாம் வெற்றி கண்டு விடமுடியாது.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

என்னும் திருக்குறளையும்,

நன்றாற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை

என்னும் திருக்குறளையும், பொதுப்பணி செய்யப் புறப்பட்டவர்கள் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

ஒரு பணியைத் தொடங்கியவர் யார் என்று நாம் பார்ப்பதை விட, அதனை வெற்றியுற முடித்தவர் யார் என்பதிலேயே நம் கவனம் முனைந்து நிற்றல் வேண்டும். நம்மை ஓர் இயக்கத்தின் கருவியாகக் கருதிக்கொள்ள வேண்டுமே தவிர, இயக்கமாகவே கருதிவிடக் கூடாது. இத்தகு மனநிலைகளைப் பெற்றுவிட்டால் ஓர் இயக்கம் மெதுமெதுவாகவேனும் சிறிது சிறிதாக வலுப்பெற்றுத் தன் இலக்கைக் காலப்போக்கில் பெற்றுவிடும். உலகந்தழுவிய ஓர் இயக்கத்தைத் தோற்றுவிப்பவர்கள் இக்கருத்துகளை முதலில் நெஞ்சில் இறுத்திக் கொள்ளல் வேண்டும்.

கடந்த 1977 திசம்பர் 16, 17, 18 ஆம் பக்கல்களில் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாடு பலவகையான இடர்ப்பாட்டு நிலையிலும் ஒருவாறு நடந்து முடிந்தது வரவேற்கத்தக்க ஒரு செய்தியாகும். இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள குரும்புசிட்டி கனகரத்தினம் என்பவரால் தோற்றுவிக்கப் பெற்றதாகும். தொடக்கக் காலத்தில் இதன் தலைவராக, தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பண்டாரகர் சாலை இளந்திரையன் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இக்கால் இதன் தலைவர் மலேசியாவில் உள்ளவரும், தமிழ், தமிழ்ப்பண்பாடு, தமிழின முன்னேற்றம் ஆகியவற்றில் ஆழ்ந்த