பக்கம்:தமிழின எழுச்சி.pdf/134

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
 
குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை!


அண்மையில், தென்மாவட்டங்களில், உலகத் தமிழின முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் அமர்த்தம் தொடர்பாகப் பத்து நாட்கள் சுற்றுச்செலவு மேற்கொண்டபொழுது, குமரிமுனைக்கும் செல்ல நேர்ந்தது, அக்கால், குமரி மாவட்டத்தில் இயக்க அமைப்புத் தொடர்பாக, நாகர்கோயில், தங்கும் விடுதியில் நம்மைக் கண்டு பேசிய உள்ளூர் அன்பர்கள் சிலர் தெரிவித்த செய்தி, நமக்குப் பெரிய வருத்தத்தையும் மன அமைதியின்மையையும் தந்தது. அச்செய்தி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்க் குமரிமுனையில், கிழக்குக் கரையையொட்டிய அழகிய ஒரு கருங்கற் பாறையில், விவேகானந்தர் சிலையும் எழில் கொழிக்கும் நினைவு மண்டபமும் அமைக்கப்பெற்றதை யொட்டித் தண்டமிழ்ப் பேராசானும், உலக முதல் மெய்ப்பொருளாசிரியரும் ஆகிய தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெருமானுக்கும், அக்குமரிமுனையில் அழகு நெடுஞ்சிலையும், அணிதிகழ் நினைவு மண்டபமும் கட்ட வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களிடையே மதர்த்து எழுந்த கோரிக்கை, அரசியல் பூசல்களுக்கும் ஆட்சி மாற்றப் புயல்களுக்கும் இடையில், படிப்படியாகக் கருக்கலைந்து போனது என்பதும், அதையொட்டிய பின்னணியுந்தாம்!

திருவள்ளுவருக்குக் குமரிமுனையில் சிலையெழுப்புதல் வேண்டும் என்னும் கோரிக்கை முதன்முதல் திருவள்ளுவர் ஈராயிரமாவது ஆண்டில், கிளர்ந்தெழுந்த பொழுது, கலைஞர் கருணாநிதியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அரசுத் தொடர்பாகவும் அக் கருத்து பேசப்பெற்றது; எழுதப் பெற்றது. அக்கால் (1978இல்) தவத்திரு குன்றக்குடி யடிகளார் சார்பில் திருச்சியில் நடைபெற்ற திருக்குறள் பேரவை