பக்கம்:தமிழின எழுச்சி.pdf/137

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

136 • தமிழின எழுச்சி

உடற் சாம்பல் இருந்த குடம், குமரிமுனைக் கடலில் கலக்கப்படுவதற்கு முன், அது வைக்கப் பெற்றிருந்த இடமே இப்பொழுது காந்தி நினைவு மண்டபமாக உருப்பெற்றிருக்கின்றது என்பதை நினைக்கையில் மனம் குமுறுகின்றது. காந்தியடிகள் நமக்கு வேண்டாதவரல்லர். அவர் நம்முடைய மதிப்பிற்கும் உகந்தவரே. எனினும், குமரிமுனையில் உள்ள சிறுசிறு இடங்களையும் வடநாட்டுத் தலைவர்களின் நினைவுகளுக்காகவே ஒதுக்கிக் கொள்வது, அவ்வளவு பரந்த மனப்பான்மையன்று. தமிழின் நலத்திற்காகவே இறுதிவரை உழைத்த ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியாரை விடவும், உலகத்திற்கே நல்லறம் கூறிய இந்திய நாட்டின் மேம்பட்ட மெய்யறிவாளர் திருவள்ளுவரை விடவும் 'காந்தியும், விவேகானந்தரும், உயர்ந்த மதிப்பிடங்களைப் பெறுபவர்களல்லர். ஒரு திருவள்ளுவருக்கும், ஒரு பெரியாருக்கும் இத்தமிழகத்தின் தென்முனையில் நினைவிடங்களும், புகழ் மண்டபங்களும் அமையவில்லையானால், தமிழகம் என்றென்றும் ஆரியத்தின் வேட்டைக் காடாகவேதான் அடிமைப்பட்டு இருக்கவேண்டியிருக்கும். சூடு, சுரணையும், தன்மானமும் அற்ற தமிழினத்திற்கு இந்த நிலை மிகவும் இழுக்கையே தருவதாகும்.

இனி, எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழக முதல்வர் ம.கோ. இராமச்சந்திரன், திருவள்ளுவரின் சிலைபற்றிக் கூறிய கருத்து தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் நெஞ்சிலும் நெருப்பை வாரிக் கொட்டுவதாகும். விவேகானந்தர் சிலையும் நினைவு மண்டபமும் முழுக்க முழுக்க ஆர்.எசு.எசின் முனைந்த முயற்சிகளின் விளைவுகளே ஆகும் என்பதைக் குமரி மாவட்டத் தமிழர் ஒவ்வொருவரின் வாயுரை வழியாகவும் தெளியலாம். அந்த மண்டபம் கட்டுவதற்கு நம் முதலமைச்சரும் ஒரு பெருந்தொகை நல்கி, அதுபற்றி அம்மண்டபத்தில் உள்ள நன்கொடையாளர் பட்டியலில் தம் பெயர் பொறிக்கப்பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எசு.எசு.க்காரர்களைக் கேட்டுக் கொண்டதர்கவும் அங்குள்ள மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். இச்செய்தி உண்மையாக இருக்குமானால், ஆர்.எசு.எசு -டன் நம் முதலமைச்சர் எவ்வாறு கைகோத்துக் கொண்டிருக்கின்றார் என்பதுபற்றி, நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது, அந்தத் ததாக உறவின் அடிப்படை உணர்வினால்தான் “நான் ஆட்சியில் உள்ள வரைக்கும், திருவள்ளுவர் சிலை பற்றிய பேச்சுக்கே இடமில்லை, என்று பேசியிருக்கவும் முடியும். இந்தநிலை எத்துணைக் கொடுமையானது, அஞ்சத் தகுந்த எதிர்காலத்தை உள்ளடக்கியிருப்பது என்று, தமிழ் நலமும் தமிழர் இனமேம்பாடும் கருதும் அன்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறோம்.