பக்கம்:தமிழின எழுச்சி.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 13

வீணே கூறிக்கொண்டு அவர்க்குக் கெடுதலை சேர்க்கின்ற பலரை யாமறிவோம், ஊர்ப் பெண்டிர்க்கு வேண்டுவன கூறித் தம் வீட்டுப் பெண்டிரை ஒழுங்காய்க் கெடாமல் காக்க வேண்டிப் பல அற முறைகளைச் செய்ய ஏவுவோர் தம்மையும் நாமறிவோம்.

“கணவற்றுறந்த அறுதன் மகளிர்க்கு மறுமணம் புணர்தலையும்" ஒவ்வொரு பெண்ணும் தத்தமக்கேற்ற கணவனை இசைந்தேற்க உரிமை அளித்தலையும் ஒழுக்கக் கேடனும், உணர்வுக் கேடனும் ஆகிய கணவர் தம்மிடமிருந்து இள மகளிரைக்காத்தல் வேண்டி மணவிலக்கு அளித் தலையும் உயர்ந்த திருத்தங்கள் என்று நாம் உள நிறைவோடே ஏற்றுக் கொள்ளுவோம். இவைபற்றி யாரும் குறை கூற விடவும் மாட்டோம். ஆனால் நாமொன்று எண்ண, நடப்பதொன்றாக வன்றோ போகின்றது என்பதை எண்ணிப் பார்க்குங்கால், ஐயகோ, உலகினர் யாவர்க்கும் ஒழுக்க நெறிகளைக் கூறிய இத் தமிழ்த்திருநாட்டின் ஒழுக்கத்தை யாரேனும் கட்டிக் காக்க முன் வருவாரா என்று கவலுற வேண்டியிருக்கின்றது.

இனம் மாய்க்கும் இப் பாழ்நிலையினின்று தாய்க்குலத்தை விடுவிக்க வேண்டி, அப்பெருமணப் பெண்டிர்க்கு ஒன்று கூற விழைகின்றோம். அம்மையீர்!

  • உங்கட்கு இயற்கையிலேயே உள்ள அன்பெனும் குணனையும், அடக்கமெனும் பண்பினையும், நாண் என்னும் காவற் கதவத் தினையும் இழக்க முற்படாதீர். பூந்தோட்டத்திற்கு இடுவேலி வேண்டுவதன்றோ. மென்மை மடவார்க்கும் நாணமென்னும் நறுங்காவல் இன்றியமையாததே.
  • நீங்கள் கல்வி கற்கத் தடை செய்வார் யார்? அக்கல்வி உங்கள் பெண்மைக்குப் பெருமை சேர்க்க வேண்டுவதல்லாது சிறுமை சேர்ப்பின் உறுபயன் யாது?
  • பெண்டிர்தமக்கு இயற்கை வலித்திய ஆண்மைச் சேர்க்கையினையும், மக்கட்பேற்றையும் விலக்குதல் ஒல்லுமோ? அவ்வாறு விலக்கின் உலகு நிலைக்குமோ? ஆகலின், ஆண் பெண் கூட்டு வாழ்க்கையும், அக் கூட்டு வாழ்வால் மலரும் மக்கட் கூட்டமும் நிலைக்கவேண்டுவதாயின் பெண்டிர்தம் இயற்கைப் பண்புகளை மாற்றிக்கொள்ளல் எஞ்ஞான்றும் கூடாது.