பக்கம்:தமிழின எழுச்சி.pdf/146

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 145

யார் பேசிய பேச்சில், 'கங்கை கொண்ட சோழன்' என்னும் அடை மொழியில் உள்ள அரசியல் வீர வரலாற்றை, 'கங்கை நீரைக் குடங்களில் கொண்டுவந்து, கோயிலிலுள்ள தெய்வச் சிலையைக் குளிப்பித்தான் - குடமுழுக்குச் செய்தான் - என்பதாகப் பேசி, மத வரலாறாக மாற்றியதைப் பலரும் உணர்ந்திராமல் இருக்கலாம்.)

இவ்வாறு தமிழின வரலாறே 'பாரத’க் கூப்பாட்டுக்குள்ளும்' தேசிய ஒருமைப்பாட்டுக்குள்ளும் அடியோடு மண்மேடிட்டு மறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுசிறு நலன்களுக்கென்று, நம் தமிழினத் தலைவர்கள் (!) இந்திய அரசிடம் கோரிக்கைகள் விடுப்பதும். மாநாடுகள் கூட்டி, ஊர்வலங்கள், பேரணிகள் நடத்துவதும், தீர்மானங்கள் போடுவதும், அவற்றின் செலவுகளுக்கென்றும், பேராட்ட வழக்குச் செலவுகளுக்கென்றும் மக்களிடம் இலக்க இலக்கமாகப் பணத்தைச் சுரண்டுவதும், கொடுமையிலும் கொடுமையாக நடந்துவரும் செயல்களே ஆகும். இவற்றுக்கெல்லாம் நம் அடிமைத்தன உணர்வுகளும் கோழைத்தனமுமே காரணங்களாம். இற்றை நிலையில் நாம் போடத்தக்க ஒரே தீர்மானமும் கோரிக்கையும் 'தனித் தமிழ்நாடு வேண்டும்' என்பதே! இக் கோரிக்கையை எழுப்ப இக்கால் முன்வரும் தலைவர்களையே நம் இனத்திற்காகப் பாடுபட முன்வந்தவராக நாம் கருதுதல் வேண்டும்.

தென்மொழி சுவடி - 21, ஓலை - 1 செப் - அத். 1984