148 • தமிழின எழுச்சி
கோரிக்கையில் பின்வாங்கக் கூடாது. அதிலேயே வலிவாக இருக்க வேண்டும்; ஏனெனில் அதுதான் தமிழினத்திற்கு, அது மீண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கிடைத்த ஒரே பற்றுக்கோடு,' - என்று உருக்கமாகக் கேட்டுக் கொண்டேன். அஃது இறுதிமுறை. ஆனால், இந்த முறை உங்களிடம் சற்று வெளிப்படையாகவே பேசினேன். அதுபோல், உங்களிடம், திருவாளர்கள், பேராசிரியர், சாதிக் பாட்சா, முரசொலி மாறன், இரகுமான்கான், பாலு இன்னும் அன்பர்கள் பலரையும் வைத்துக் கொண்டு இதுவரை எவருமே அப்படி பேசியிருக்க முடியாதென்று கருதுகின்றேன். நானாக இல்லாமல், வேறு யாரேனும் அவ்வாறு வெளிப்படையாகப் பேசியதற்கு என்று கூடச் சொல்லமுடியாது.. எச்சரிக்கை செய்ததற்கு ..என்னை, நம் தொண்டர்கள், தூக்கி வெளியே எறிந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழலில் நான், தமிழீழத்தைப் பற்றியக் கருத்தைக் கூறிவிட்டு, நம் தமிழ்நாட்டு அரசியல், இன நிலைகளைக் குறிப்பிட்டுத் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நிலைகளைப் பற்றிக் கூறினேனே, அந்தக் கருத்துகளும் எச்சரிக்கைகளும் உங்களுக்கு மிக நன்றாக நினைவிலிருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் சொன்னேன்: “இந்த அரசியல் பதவி உங்களுக்கு அறவே வேண்டாம். அது தேவையில்லை, அதில் பழைய நிலையை நீங்கள் பெறவே முடியாது. எனவே அதில் காலத்தையும் முயற்சியையும் வீணடிக்க வேண்டாம், பெரியாரைப்போல இன முன்னேற்ற முயற்சிக்காக நேரில் மக்களிடம் வந்து விடுங்கள். தமிழ் இனம் முன்னேற, முன்னர்க் கைவிட்டதாக அறிவித்த தனித்தமிழ் நாட்டுக் கொள்கையை மீண்டும் கையிலெடுத்துக் கொண்டதாக வெளியறிவிப்புச் செய்து (பிரகடனப் படுத்தி) விடுங்கள் : அதுதான் உங்களுக்கும் நம் இனத்திற்கும் நல்லது : நலம் பயப்பது. அரசியலை அறவே விட்டு வெளியேறி வாருங்கள் : நாங்களெல்லாம் உங்கள் பின்னேயிருந்து உழைக்கின்றோம் : தோள்கொடுத்து உதவுகின்றோம். உங்களுக்குப் போதும் இந்த அரசியல் வாழ்வு. இனி, நீங்கள் ஆளவேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஆண்ட இடத்தில்தானே அவர்கள் இருந்து ஆள்கிறார்கள்”.. என்று, இதைவிட இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் வெளிப்படையாகவும், உணர்வாகவும், அறிவாகவும் பேசிய கருத்துகளை நீங்கள் இதற்குள் மறந்தே இருக்கமுடியாது. ஆனால், என் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய கலைஞர் அவர்களே, இப்பொழுது என்ன நடந்தது? நான் சொன்னது நடந்ததா, இல்லையா? இப்பொழுதும், இறுதியாகவும், இதைத்தான் சொல்வதற்கு இம் மடலை, இன்னும் வெளிப்படையாக, எழுத விரும்புகின்றேன்.